தமிழகத்தை தாக்கிய புயலுக்கு அரேபியத் தலைவரின் பெயர் சூட்டப்பட்டதா?
மாண்டஸ் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்த்த அப்துல்லா அல் மாண்டஸ் என்பவரின் பெயர் சூட்டப்பட்டதாக தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது
By Ahamed Ali Published on 12 Dec 2022 4:25 PM IST"இன்று தமிழகம் வரும் புயலுக்கு 'மாண்டஸ்' என்று ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? டாக்டர் அப்துல்லா அல் மாண்டஸ் என்ற அரபு காரரின் பெயர் தான் அது யார் இவர்? ஐக்கிய அரபு அமீரக நாட்டில் பிறந்த இந்த அப்துல்லா அல் மாண்டஸ் தான் இப்போது உலக நாடுகளின் வானியல் ஆய்வு அமைப்புகளின் தலைவர். BSc, MSc, PhD என வானிலை ஆராய்ச்சி தொடர்பாகவே பல நாடுகளில் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது பெயரை தான் இப்போது தமிழ்நாட்டில் அடிக்கும் புயலுக்கு பெயராக வைத்துள்ளார்கள்" என்று அரேபியர் ஒருவருடைய புகைப்படத்துடன் எடிட் செய்யப்பட்ட தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
வைரலாகும் புகைப்படம்
Fact-check:
இதன் உண்மைத்தன்மை குறித்து கண்டறிவதற்காக மாண்டஸ் புயலின் பெயர் காரணம் குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ஏபிபி நாடு செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், "குழப்பத்தைத் தவிர்க்க ஒவ்வொரு முறையும் சூறாவளிக்கு பெயரிடப்பட வேண்டும் என்று உலக வானிலை அமைப்பு (WMO- World Meteorological Organization) விளக்குகிறது. இந்த பெயர்களை வெப்ப மண்டல சூறாவளி ஆலோசனைகளுடன், ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்கள் (RSMCs) மற்றும் ஐந்து பிராந்திய வெப்ப மண்டல புயல் எச்சரிக்கை மையங்கள் (TCWCs) உலகம் முழுவதும் இருந்து வழங்குகின்றன. இந்த ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்களில் இந்தியாவும் ஒன்று. வங்கதேசம், ஈரான், மியான்மர், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் ஆகியவையும் இதில் அடங்கும்.
நாடுகளின் பெயர்கள் அகரவரிசையில் உள்ளன. மேலும், அவற்றின் பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகள் புதிய புயல்களின் பெயர்களாக சூட்டப்படுகின்றன. இதுவரை, தற்போதைய பட்டியல் 1-ல் இருந்து 11 பெயர்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன. நிசர்கா, கதி, நிவர், புரேவி, டௌக்டே, யாஸ், குலாப், ஷாஹீன், ஜவாத், அசானி மற்றும் சித்ராங் ஆகிய பெயர்கள் இதில் அடங்கும். இப்போது, மாண்டஸ். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது.
"சூறாவளி மாண்டஸின் அர்த்தம் என்ன, அதற்கு 'புதையல் பெட்டி' என்று யார் பெயரிட்டது?(மொழிபெயர்க்கப்பட்டது)" என்ற தலைப்புடன் சிஎன்பிசி டிவி18 செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய வானிலை ஆய்வு மையம், 'Mandous' என்பது உலக வானிலை அமைப்பின் உறுப்பினரான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சமர்ப்பித்த பெயர் என்றும், 'Man-Dous' என உச்சரிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளது. இதற்கு அரபு மொழியில் 'புதையல் பெட்டி' என்று பொருள்(மொழிபெயர்க்கப்பட்டது)" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே தகவலை நியூஸ் 18, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களும் வெளியிட்டுள்ளன.
உலக வானிலை அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புயல்களுக்கு பெயர் வைக்கும் வழிமுறைகள் குறித்து தேடினோம். அப்போது, " ஒரு குறிப்பிட்ட நபரின் பெயர் சூறாவளிகளுக்கு வைக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது" என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது பரவி வரும் தகவல் ஒன் இந்தியா தமிழ் செய்தித் தளத்தில் கட்டுரையாக வெளியிடப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. இக்கட்டுரையின் அடிப்படையிலேயே தகவல் பரவி வருவதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
Conclusion:
இறுதியாக நமது தேடலின் மூலம் கிடைத்து இருக்கக்கூடிய ஆதாரங்களில் அடிப்படையில் மாண்டஸ் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அப்துல்லா அல் மாண்டஸ் என்பவரின் பெயர் சூட்டப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.