வெங்கட சுப்பிரமணியம் என்பவரின் பேஸ்புக் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், "உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்காக வந்த வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக கத்தார் மீது விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன. இதனை முன் கூட்டியே கணித்து உலகக் கோப்பை கால்பந்தா, பாரதத்தின் கௌரவமா என்று வருகையில் தேசமே முக்கியம் என்று முடிவெடுத்து இந்தியக் கால்பந்து அணியை அரபுநாடான கத்தாருக்கு அனுப்பவேண்டாம் என்று உறுதிபடக் கூறிய பாரதப்பிரதமர் மோடிஜியின் தீர்க்க தரிசனம் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.
அத்தோடு நிற்காமல் நமது வீரர்கள் அனைவருக்கும் உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகையை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் என்பதுதான் இதில் சிறப்பே. இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்தோம். ஜெய் ஹிந்த்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact-check:
இதன் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய முதலில், இந்தியக் கால்பந்து அணியை கத்தாருக்கு அனுப்பவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்த போது(கீவர்ட் சர்ச் முடிவுகள் தமிழ்/ஆங்கிலம்), அது போன்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது. மேலும், 2022-ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய கால்பந்து அணி ஏன் பங்கேற்கவில்லை என்று தேடிய போது, கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி குவகாத்தியில் நடைபெற்ற உலகக்கோப்பை தகுதிப் போட்டியில் ஒமானுடன் போட்டியிட்டு இந்திய அணி தோல்வி அடைந்தது ஃபிஃபாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக தெரிய வந்தது. மேலும், இந்திய அணி 1950-ஆம் ஆண்டைத் தவிர எந்த ஒரு உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கும் தேர்ச்சி பெறவில்லை என்பது குறித்த விரிவான கட்டுரையை பிபிசி தமிழ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகக்கோப்பை தகுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி
தொடர்ந்து, இந்திய வீரர்கள் அனைவருக்கும் உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகையை வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ள கூற்றின் உண்மைத் தன்மையைக் கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது(கீவர்ட் சர்ச் முடிவுகள் தமிழ்/ஆங்கிலம்), அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும், உறுதிப்படுத்த பிரதமர் மோடியின் சமூக வலைதளப் பக்கங்களில் தேடினோம்.
அப்போது, 2022-ம் ஆண்டிற்கான 36-வது தேசியப் போட்டியில் மணிப்பூர் கால்பந்து வீராங்கனைகளின் விளையாட்டைப் புகழ்ந்து டுவிட் ஒன்றை கடந்த அக்டோபர் 12-ம் தேதி பிரதமர் பதிவிட்டுள்ளார். அதன் பிறகு கால்பந்து தொடர்பான எந்த ஒரு பதிவோ அல்லது அறிக்கையோ வெளியிடப்படவில்லை. மேலும், இது போன்ற ஒரு அறிவிப்பை பிரதமர் வெளியிட்டிருந்தால் கண்டிப்பாக அனைத்து செய்தி நிறுவனங்களிலும் முக்கியச் செய்தியாக வெளியாகி இருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
நமது தேடலின் மூலம் இந்தியக் கால்பந்து அணியை கத்தாருக்கு அனுப்பவேண்டாம் என்று பிரதமர் எந்த ஒரு உத்தரவையும் வெளியிடவில்லை. அதே போன்று, நமது வீரர்கள் அனைவருக்கும் உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகையை வழங்கவும் பிரதமர் உத்திரவிடவில்லை என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.