"பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் திருமண அழைப்பிதழ்களில் வைத்து கஞ்சா கடத்தல் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் மொத்தம் 43 திருமண அழைப்பிதழ்களில் ஒரு கட்டில் 120 கிராம் கஞ்சா வைத்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அழைப்பிதழ்களை அதிகாரிகள் பிரித்து எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது" என்று ஒரு பெண் பேசக்கூடிய காணொலி பேஸ்புக்கில் தற்போது வைரலாகி வருகிறது. இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காணொலியில், அதிகாரிகள் சிலர் திருமண அழைப்பிதழ்களைப் பிரித்து அதிலிருந்து கவரில் பேக்கிங் செய்யப்பட்டு இருந்த வெள்ளை நிற பொடியை வெளியே எடுக்கின்றனர்.
திருமண அழைப்பிதழ்கள் வைத்து கஞ்சா கடத்தியதாக வைரலாகும் காணொலியின் புகைப்படம்
Fact-check:
இச்சூழலில், வைரலாகி வரும் காணொலியின் ஒரு குறிப்பிட்ட காட்சியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, "43 திருமண அழைப்பிதழ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 5.5 கோடி மதிப்பிலான 5 கிலோ எடையுள்ள எபெட்ரின்(Ephedrine) எனும் போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்." இச்சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்றதாக என்டிடிவி, டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிவி 9 கன்னடம் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.
இது மட்டுமின்றி, ஐபிஎஸ் அதிகாரி ருபின் ஷர்மா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், "விமான நிலையத்தில் #திருமண அட்டையுடன் ஒரு பெண் பிடிபட்டார். கார்டுகளில் ட்ரக்ஸ் இருந்தன. கவனமாக இருங்கள்... விமான நிலையத்தில் யாரிடமும் எதையும் எடுக்க வேண்டாம்." என்று குறிப்பிட்டு தற்போது வைரலாகி வரும் காணொலியை இணைத்து பதிவிட்டுள்ளார்.
Conclusion:
நமது தேடலின் மூலம் கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், தற்போது பேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் இக்காணொலி கடத்த 2022-ம் ஆண்டு பெங்களூர் விமான நிலையத்தில் திருமண அழைப்பிதழ்களில் போதைப் பொருள் கடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொலி என்பது ஆதாரப்பூர்வமாக உறுதியாகிறது. மேலும், குஜராத்தில் திருமண அழைப்பிதழ்களில் வைத்து கஞ்சா கடத்துவதாக இதனை தவறாகப் பரப்பி வருகின்றனர்.