சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரை கடந்த சில தினங்களுக்கு முன்பு எலான் மஸ்க் வாங்கினார். தொடர்ந்து, அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான பராக் அகர்வால், சட்ட ஆலோசகர் மற்றும் பாலிசித் தலைவரான விஜய கட்டே உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்களை எலான் மஸ்க் பணியில் இருந்து நீக்கியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்க போட்காஸ்டரான ஜோ ரோகனின் போட்காஸ்ட் நேரலையின் போது டுவிட்டரின் பாலிசித் தலைவரான விஜய கட்டேவை, எலான் மஸ்க் பணியில் இருந்து நீக்கியது போன்ற 18 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இந்நிலையில் , வைரலாகி வரும் காணொலியின் ஒரு குறிப்பிட்ட காட்சியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த 2019-ம் ஆண்டு ஜோ ரோகனின் போட்காஸ்ட்டில் டுவிட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி, பாலிசித் தலைவர் விஜய கட்டே, ஜோ ரோகன் மற்றும் பத்திரிகையாளர் டிம் பூல் ஆகியோர் 'தணிக்கை மற்றும் பேச்சு சுதந்திரம்' குறித்து சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான காணொலி ஜோ ரோகனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும், இதில் எலான் மஸ்க் இல்லை என்பதையும் நம்மால் காண முடிகிறது.
தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு எலான் மஸ்க் மற்றும் ஜோ ரோகன் தனியாக உரையாடக்கூடிய காணொலியும் அதே யூடியூப் சேனலில் உள்ளது. இந்த இரண்டு காணொலியையும் எடிட் செய்து மற்றொரு யூடியூப் சேனலில் "எடிட் செய்யப்பட்ட காணொலி(edited form 2 podcast interview , Elon Musk fired Vijaya Gadde on joe rogan podcast)" என்ற தலைப்புடன் தற்போது வைரலாகி வரும் காணொலி பதிவேற்றப்பட்டு இருந்தது. இறுதியாக இந்தக் காணொலி எடிட் செய்யப்பட்டு பரப்பட்டது என்பதை உறுதிபடுத்தும் விதமாக செய்தி ஒன்றும் வெளியாகி உள்ளது.
Conclusion:
நமக்கு கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் எலான் மஸ்க், ஜோ ரோகனின் போட்காஸ்ட் நேரலையின் போது டுவிட்டரின் பாலிசித் தலைவரான விஜய கட்டேவை நீக்கியதாகப் பரவும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.