மனிதக் குழந்தைகள் ஆய்வகத்தில் பிறக்கின்றனவா? வைரல் காணொலியின் உண்மைப் பின்னணி!
மனிதக் குழந்தைகள் கருப்பை இல்லாமல் ஆய்வகத்தில் பிறக்கின்றன என்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Ahamed Ali Published on 17 Dec 2022 6:38 AM GMT"இன்குபேட்டரில் ஆயிரக்கணக்கான கோழி முட்டைகள் குஞ்சு பொரித்து கோழிக்குஞ்சுகளை உருவாக்குவது போல, மனிதக் குழந்தைகள் கருப்பை இல்லாமல் ஆய்வகத்தில் பிறக்கின்றன. தந்தை மற்றும் தாயின் விந்தணுக்கள் இணைந்து ஆய்வகத்தில் உள்ள ஒரு சிறப்பு அறையில் வளர்க்கப்படுகின்றன. இந்த அமைப்பு, கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் பதிவு செய்து, பெற்றோர்களால் அதை மொபைல் போனில் பார்க்கவும் முடியும்.
வைரலாகும் காணொலி
இப்படிப் பிறக்கும் குழந்தைகள் மிகவும் புத்திசாலியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்களாம். நம் மனிதகுலம் எங்கே செல்கிறது...? எதைநோக்கி செல்கிறது…?" என்ற தகவலுடன் 2 நிமிடம் 50 விநாடிகள் ஓடக்கூடிய கம்யூட்டர் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஒரு கண்ணாடி போன்ற குடுவைகளில் வைக்கப்பட்டிருப்பது போன்றும், அதனை சில ஆராய்ச்சியாளர்கள் பரிசோதிப்பது போன்றும் அந்தக்காணொலி உருவாக்கப்பட்டுள்ளது.
Fact-check:
இதன் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய காணொலியை முழுமையாகப் பார்த்தபோது, "Ectolife" என்ற உலகின் முதல் செயற்கை கருப்பை என்று விளக்கப்படிருந்தது. தொடர்ந்து, எக்டோலைஃப்(Ectolife) குறித்து கூகுளில் தேடிய போது. "ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை வளர்க்கும் உலகின் முதல் 'செயற்கை கருப்பை வசதி'? கருத்து வீடியோ இணையத்தை திகைக்க வைக்கிறது(மொழிபெயர்க்கப்பட்டது)" என்ற தலைப்புடன் டைம்ஸ்நவ் செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "எக்டோலைஃப் என்பது ஒரு வருடத்திற்கு 30,000 குழந்தைகளை வளர்க்கக்கூடிய உலகின் முதல் செயற்கை கருப்பை வசதிக்கான ஒரு கருத்தாகும். பயோடெக்னாலஜிஸ்டான ஹாஷிம் அல்-கெய்லியின்(Hashem Al-Ghaili) கூற்றுப்படி, இது உலகளவில் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலான அற்புதமான அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது(மொழிபெயர்க்கப்பட்டது)" என்று கூறப்பட்டுள்ளது. இது டெய்லிமெயில் உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவனங்களிலும் கட்டுரையாக வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த காணொலி ஒரு கருத்தாக்கம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
மேலும், இது கருத்தாக்கம் தானா என்பதை உறுதிப்படுத்த ஹாஷிம் அல்-கெய்லி குறித்து கூகுளில் தேடினோம். அப்போது, "தனது அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பின்னணியைப் பயன்படுத்தி ஹாஷிம் புத்தம் புதிய கருத்துக்களை உருவாக்குகிறார். அவற்றில் சில ஸ்கை குரூஸ் ஃப்ளையிங் ஹோட்டல்(Sky Cruise Flying Hotel) மற்றும் உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி எக்டோலைஃப் ஆகியவை அடங்கும். ஹாஷிம், ஜேக்கப்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டமும், மூலக்கூறு உயிரியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்(மொழிபெயர்க்கப்பட்டது)" என்று அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தேடிய போது, எக்டோலைஃப் குறித்து 8 நிமிடம் 39 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி மற்றும் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அப்பதிவின் ஒரு பகுதியில் "எனது புதிய கருத்து - எக்டோலைஃப் - வயது தொடர்பான மலட்டுத்தன்மையை முற்றிலுமாக ஒழிக்க உறுதியளிக்கிறது. இது எந்த வயதிலும் பெண்கள் குழந்தையை கருத்தரிக்க உதவி செய்கிறது" என்று கூறியுள்ளார். இவற்றின் மூலம் இந்தக் காணொலி ஒரு கருத்தாக்கம் என்பதை நம்மால் உறுதிபடுத்த முடிகிறது.
கடந்த காலங்களில் செயற்கையாக கருப்பை தயாரிப்பது தொடர்பாக ஆராய்ச்சிகள் ஏதும் நடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த 2016-ம் ஆண்டில், மனித கருக்கள் ஒரு செயற்கை கருப்பை சூழலில் 13 நாட்களுக்கு வளர்வது குறித்து இரண்டு ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதே போன்று கடந்த 2017-ம் ஆண்டில், பிலடெல்பியா குழந்தைகள் மருத்துவமனையின் கரு ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை வெளியிட்டனர், அவர்கள் குறைமாத ஆட்டுக்குட்டியின் கருவை செயற்கை கருப்பையைக் கொண்டு நான்கு வாரங்கள் வளர்த்துள்ளனர்.
பிலடெல்பியா குழந்தைகள் மருத்துவமனையின் செயற்கை கருப்பை ஆய்வு
Conclusion:
இறுதியாக நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் மனிதக் குழந்தைகள் கருப்பை இல்லாமல் ஆய்வகத்தில் பிறக்கின்றன என்று பகிரப்பட்டு வரும் காணொலி மற்றும் தகவல் பயோடெக்னாலஜிஸ்டான ஹாஷிம் அல்-கெய்லியின் கருத்தாக்கம் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், இதனை உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.