தமிழ்நாட்டில் மகளிர் கல்லூரியில் பயிலும் இந்து மாணவிகளை சில இஸ்லாமிய இளைஞர்கள் கேலி செய்வதாகவும். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி ஒருவரின் தந்தையைத் தாக்கியது போன்றும் 45 வினாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை வட மாநில பாஜகவினர் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
பகிரப்பட்டு வரும் காணொலியின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிவதற்காக காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இரு வேறு சம்பவங்களின் காணொலி ஒன்றாக இணைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதன்படி, முதல் பகுதியில் இருக்கக்கூடிய காணொலியில் வரக்கூடிய சம்பவம், கடந்த அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியின் போது மதுரை தல்லாகுளத்தில் உள்ள லேடி டோக் பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் சிலர் வாட்ச்மேனை எட்டி உதைத்து தாக்கியதோடு, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இதுகுறித்து, தல்லாகுளம் காவல்துறை வழக்குப் பதிந்து பத்து பேரை கைது செய்து அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதனை பல்வேறு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. மதுரை மாநகர் காவல்துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இச்சம்பவம் குறித்து பதிவு செய்துள்ளனர்.
மேலும், இரண்டாவது சம்பவம் குறித்து தேடினோம். கடந்த நவம்பர் 04-ம் தேதி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவியின் தந்தை செந்தமிழ்பாண்டியன். தனது மகளை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர கல்லூரி வாசலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, பிரேதத்துடன் வந்துகொண்டிருந்த ஆம்புலன்ஸின் முன்புறமும், பின்புறமும் இருசக்கர வாகனத்தில் சிலர் சென்றுள்ளனர். அவர்கள் ஹாரனில் சத்தம் எழுப்பியபடி கல்லூரி வாசலில் நின்றிருந்த மாணவிகளை பார்த்துக் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அதனை செந்தமிழ்பாண்டியன் தட்டிக்கேட்டதற்கு கூட்டத்தில் வந்த சிலர் சேர்ந்து அவரை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து, செந்தமிழ்பாண்டியன் அளித்த புகாரின் பேரில் செல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆறு பேரையும் கைது செய்துள்ளனர். இதனை பல்வேறு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. மேலும், மதுரை மாநகர் காவல்துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இச்சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளனர். காவல்துறையினரின் பதிவுகளின் அடிப்படையில், இரண்டு சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எபிபி நாடு செய்தியாளர் அருண் இரு சம்பவங்கள் குறித்தும் தனது டுவிட்டர் பக்கத்தில்(சம்பவம் 1, சம்பவம் 2) பதிவிட்டுள்ளார்.
Conclusion:
இறுதியாக, இஸ்லாமிய இளைஞர்கள், இந்து பெண்களை ஈவ் டீசிங் செய்வதாக வட மாநில பாஜகவினர் பரப்பி வரும் தகவல் தவறானது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடிகிறது.