கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இடைவெளியில் மைதானத்தில் இருந்த இஸ்லாமியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் நின்றுகொண்டு தொழுகை நடத்துவது போன்று 29 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை இஸ்லாமியர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் முன்னாள் கவர்னரான சௌத்ரி முகமது சர்வாரும் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதே காணொலியைப் பகிர்ந்துள்ளார்.
Fact-check:
இந்நிலையில், இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக இக்காணொலியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். Realnoevremya என்ற ரஷ்ய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி தத்தாரிஸ்தான்(Republic of Tatarstan) தலைநகர் கசானில்(Kazan) உள்ள ஏகே பார்ஸ் மைதானத்தில்(AK Bars Arena or Kazan Arena) நடைபெற்ற இஸ்லாமியர்களின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு தொழுகை நடத்தி உள்ளனர். இந்நிகழ்வில், சுமார் 10,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தத்தாரிஸ்தான் என்பது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ரஷ்யக் கூட்டமைப்பின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற பகுதியாகும். மேலும், இந்த நிகழ்வின் முழு நீள வீடியோவை அலிஃப் டிவி(Alif TV) என்ற யூடியுப் சேனல் பதிவேற்றி உள்ளது.
அந்தக் காணொலியின் பின்புறத்தில் கசான்(KAZAN) என்று எழுதப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. இந்த எழுத்து அந்த மைதானத்தில் உள்ளதா என்பதை கூகுள் மேப்பில் சர்ச் செய்து பார்த்தபோது. கசான் என்ற எழுத்து அங்கு இருந்தது தெரியவந்தது. இதன் மூலம் இஃப்தார் நிகழ்வு ஏகே பார்ஸ் மைதானத்தில் நடைபெற்றதை உறுதிபடுத்த முடிகிறது.
Conclusion:
இறுதியாக நமது தேடலின் மூலம் தற்போது வைரலாகும் காணொலி 2016-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் இஃப்தார் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட காணொலி என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.