இந்திய இளைஞர்களை குறிவைத்து சீன நிறுவனம் தயாரித்த இளம் பெண்ணின் ரோபோ என்று பரவும் வதந்தி!
சீன நிறுவனம் ஒன்று 'குரி' என்ற இளம் பெண்ணின் தோற்றமுடைய ரோபோ ஒன்றை இந்திய இளைஞர்களை குறிவைத்து சந்தைப்படுத்த உள்ளதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Ahamed Ali Published on 10 Nov 2022 6:16 PM GMT"சீனாவில் செயற்கையாக தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இளம் பெண்ணை விரைவில் இந்தியாவில் விற்பனை செய்ய அந்நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த செயற்கை இளம் பெண் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 75 மணி நேரம் வேலை செய்யும் இப்பெண்ணின் சந்தை விலை ரூ. 2 லட்சம். செயற்கை நுண்ணறிவில் செயல்படுவதால் இப்பெண்ணால் எந்த ஒரு மொழியையும் 99 விழுக்காடு துல்லியமாக பேச முடியும். எனவே, நீங்கள் அழகுத் தமிழில் புகுந்து விளையாடலாம். இது ஒரு இயந்திரம் என்பதால் உங்களிடம் சண்டையிடாது, கோபித்துக்கொள்ளாது, பழிவாங்காது அவ்வளவு ஏன் இதற்கு சோறு கூடப் போடத் தேவையில்லை. 'குரி(Kuri)' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இளம் பெண்ணை இந்திய இளைஞர்களை குறிவைத்து இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த 'குரி' விற்பனைக்கு வரும் பட்சத்தில் ஏராளமான 90ஸ் கிட்ஸ்களின் கல்யாண ஆசை நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று ஒரு பெண் பேசுவது போன்ற ஆடியோவுடன், ஒரு பெண்ணின் உருவத்துடன் கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இந்த காணொலியின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிவதற்காக காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ள 'குரி' என்ற ரோபோ குறித்து கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது 2018-ம் ஆண்டு பிபிசி ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், "குழந்தைகளுடன் விளையாடுவது, குரல் கட்டளைகளுக்கு பதிலளிப்பது உள்ளிட்டவற்றிற்காக 'குரி' ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், தேடிய போது அந்த ரோபோவிற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், அமெரிக்க நிறுவனமான மேஃபீல்ட் ரோபோட்டிக்ஸ்(Mayfield Robotics) "குரி ரோபோவின் உற்பத்தியை 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதியுடன் நிறுத்துகிறது. தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படாது. முன்கூட்டிய ஆர்டர் டெபாசிட்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித் தரப்படும்" என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குரி ரோபோட் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது என்பதையும், மேஃபீல்ட் ரோபோட்டிக்ஸ் அமெரிக்க நிறுவனம் என்பதையும் கூற முடிகிறது. அந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள குரி ரோபோட்டின் புகைப்படத்தின் மூலம் இயந்திரத்தைப் போன்ற தோற்றம் கொண்டுள்ளதை நம்மால் காண முடிகிறது. அதேபோன்று, அந்த ரோபோ இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளதாக எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.
குரி ரோபோவின் உண்மையான தோற்றம்
கானொலியில் இருக்ககூடிய பெண் யார் என்பது குறித்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ஷ்ரவ்யா(Shravya) என்ற மாடலின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் நமக்கு கிடைத்தது. அதில், தற்போது வைரலாகி வரும் அதே காணொலியை கடந்த மே 7-ம் தேதி அவர் பதிவிட்டு இருந்தார். தொடர்ந்து, "நான் ROBOT இல்ல பொண்ணு..! மக்களை மிரள வைத்த பொம்மை பெண்..! VIRAL DOLL SHRAVYA பேட்டி" என்ற தலைப்புடன் வலரலான பெண்ணிடம் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றை பிகைன்ட்வுட்ஸ் O2 தனது யூடியூப் சேனலில் கடந்த நவம்பர் 7-ம் தேதி வெளியிட்டு இருந்தது. அப்பேட்டியில், "பப்ஜியில் வரக்கூடிய சாரா என்ற கேரக்டரை டால் போன்று வீடியோவாக வெளியிட்டு இருந்தேன். அது சமூக வலைதளங்களில் வேகமாக ட்ரெண்டானது. அதைத் தான் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ என்று தவறாக பரப்பினர்" என்று கூறியுள்ளார். காணொலியின் 5:09 முதல் 7:20 வரையிலான பகுதியில் இது தொடர்பாக விரிவாக பேசி உள்ளார்.
Conclusion:
இறுதியாக, நமது தேடலின் மூலம் பகிரப்பட்டு வரும் காணொலியில் இருக்கக்கூடிய தகவல் வதந்தி என்பதை நம்மால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், அதில் கூறப்படும் குரி என்ற ரோபோவின் தயாரிப்பும் கடந்த 2018-ம் ஆண்டே நிறுத்தப்பட்டிருப்பதை நம்மால் கூற முடிகிறது.