திருப்பூரில் பெண்ணைத் தாக்கி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக பரவும் வதந்தி!
ராஜஸ்தானில் நடைபெற்ற கொள்ளை முயற்சியின் சிசிடிவி காட்சியைத் திருப்பூரில் நடைபெற்றதாகக் கூறி தவறாக சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.
By Ahamed Ali Published on 1 Oct 2022 6:51 PM IST"வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம்" என்று தலைப்பிட்டு, "தமிழகப் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும். குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று சொல்லி திருப்பூரில் பெண்ணைத் தாக்கி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. பெண் படுகாயம். எச்சரிக்கை, எச்சரிக்கை" என்று கூறி 51 வினாடிகள் ஓடக்கூடிய சிசிடிவி காட்சி ஒன்று பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தவறாகப் பரவிய சிசிடிவி காட்சி
அந்தக் காணொலியில், காவலர் சீருடையில் இருக்கும் மர்ம நபர் ஒருவர் வீட்டிலிருந்த பெண்ணிடம் டம்ளரில் தண்ணீரை வாங்கி அருந்துகிறார். தொடர்ந்து, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக வீட்டினுள் தள்ளியபடி உள்ளே செல்கிறார். பெண் கூச்சலிடவே வேறு இரண்டு ஆண்கள் வீட்டின் உள்ளே செல்கின்றனர். சற்று நேரத்தில் உள்ளே சென்ற மூன்று ஆண்களும் வீட்டை விட்டு வெளியே தப்பிச் செல்கின்றனர். அப்பெண்ணும் அவர்களைத் துரத்திச் சென்று மீண்டும் வீட்டினுள் சென்று விடுகிறார்.
Fact-check:
இது குறித்த உண்மைத் தன்மையைக் கண்டறியக் காணொலியின் ஒரு குறிப்பிட்ட காட்சியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, இதே காணொலி பாகிஸ்தானிலும் வைரலானது தெரியவந்தது. மேலும், இதற்கு விளக்கமளிக்கும் வகையில் கராச்சி காவல்துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், "கொரியர் உடையில் கொள்ளையடிக்கும் போலிக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது கராச்சி, குலிஸ்தான்-இ-ஜோஹர் பகுதி மக்களிடையே பீதியைக் கிளப்பி உள்ளது" என்று தெரிவித்துள்ளனர். மேலும், "உண்மையில் இது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த சம்பவம்" என்று நியூஸ் 24 என்ற செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் பதிவை மேற்கோள் காட்டி இருந்தனர்.
பாகிஸ்தானில் பரவிய அதே காணொலி
தொடர்ந்து, ராஜஸ்தானில் இது போன்ற சம்பவம் நடைபெற்றதா என்ற முழு விவரத்தை அறிய கீவர்ட் சர்ச் செய்தபோது. கடந்த 14-ம் தேதி டைம்ஸ் நைவ் செய்தி நிறுவனம் இது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், "ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காவலர் சீருடையில் கொள்ளையடிக்கும் கும்பல், நகரின் பல வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், மங்கலம் நகரில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் கொள்ளையர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கொள்ளையர்கள் தப்பியோடி உள்ளனர். இச்சம்பவத்தில், காவலர் சீருடையில் வந்த கொள்ளையர்கள், பெண்ணிடம் ஒரு டம்ளர் தண்ணீர் கேட்டுள்ளனர். மேலும், அவரது கவனத்தை திசை திருப்பி, கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைய முயன்றனர். ஆனால், பெண் தைரியமாக சண்டையிட்டு கொள்ளையர்களிடமிருந்து தப்பி உள்ளார். இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
மேலும், கொள்ளை கும்பல் ஸ்விப்ட் காரில் வந்ததாக கூறப்படுகிறது. தற்போது, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்" என்று அச்செய்தியில் பதிவாகி உள்ளது. அதே காணொலியை ராஜஸ்தானில் நடைபெற்ற சம்பவம் என்று ஸ்க்ரால் செய்தி நிறுவனமும் தங்களது தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
Conclusion:
இறுதியாக, நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், பரவி வரும் காணொலி ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. மேலும், குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று சொல்லி திருப்பூரில் பெண்ணை தாக்கி நகைகள் கொள்ளை அடிக்கபட்டதாக பரவும் தகவல் வதந்தியே.