திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவினுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டதா? உண்மை என்ன?
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவினுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டதாக வலதுசாரியினர் சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.
By Ahamed Ali Published on 20 Sept 2022 8:59 PM IST"ஹலால் சான்றிதழ் பெற்ற ஆவின் வெண்ணெயை வீட்டு உபயோகத்திற்கோ, ஹோமம், திதி ஆகியவற்றிற்கோ, கோவில்களுக்கோ பயன்படுத்துவதை தவிர்ப்போம். அமுல் இருக்கவே இருக்கு. விலையும் ஆவினை விட குறைவு தான்" என்று பேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டு இருந்தார்.
பேஸ்புக் பதிவு
மேலும், டுவிட்டரில் பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார், "ஆவடி நாசரின் மதவெறிக்கு அரசு இயந்திரத்தை பயன்படுத்துவது சரியா முதல்வரே" என்று குறிப்பிட்டு, தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் வெண்ணை பாக்கெட்டில் "ஹலால் சான்றிதழ்" என இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதே போன்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வலதுசாரியினர் பலரும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஹலால் என்பது இஸ்லாமியர்களுக்கான அனுமதிக்கப்பட்ட உணவு என்பதை குறிக்கும் சூழலில், ஒரு மதச் சார்பாக தமிழக அரசு நடந்து கொள்வதாகவும், ஆவின் பொருள்களை புறக்கணித்து அமுல் போன்ற நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கலாம் என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
பேஸ்புக் வீடியோ பதிவு
Fact-check:
இந்நிலையில், பகிரப்பட்டு வரும் தகவலின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிவதற்காக நியூஸ்மீட்டர் முயற்சி செய்தது. அதன்படி கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்தபோது, டிடி நெக்ஸ்ட் என்ற ஆங்கில செய்தித்தளத்தில் செப்டம்பர் 19-ம் தேதி கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில், தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் எஸ்.ஏ. பொன்னுசாமி, "ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் இப்படியான பதிவுகளை இந்து அடிப்படைவாதிகள் பதிவு செய்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டும் இது போன்ற பதிவுகள் வலம் வந்தன. 117 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள ஆவின் பால் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழைப் பெறுவது அவசியமாகும். குஜராத்தின் தேசிய பிராண்டான அமுல் மற்றும் பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புகளும் கூட இதே காரணத்திற்காக ஹலால் சான்றிதழைப் பெற்றிருக்கும் போது, ஆவின் மட்டும் ஏன் ஒரு மதத்துடன் இணைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, தேடும் போது மலேசியா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங், கத்தார், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, இலங்கை, ஓமன், ஆப்ரிக்கா, வியட்நாம், சீனா, கம்போடியா மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 01-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் அன்றைய பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறி இருப்பதும், 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு ஆண்டுக்கு 60 கோடி மதிப்பில் ஆவின் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆவின் அளித்த விளக்கம்
மேலும், ஆவின் நிறுவனத்தின் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தேடினோம் அதில், "ஆவின் பால் பண்ணைகள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய உரிமத்துடன் பல்வேறு உணவு பாதுகாப்பு மேலாண்மை தர சான்றிதழ்கள் பெறப்பட்டு இயங்கி வருகிறது. இவற்றுடன் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஹலால் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளது." என்று பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்து ஹலால் சான்றிதழ் தொடர்பான சர்ச்சைக்கு ஆவின் விளக்கம் அளித்துள்ளது.
Conclusion:
இவற்றின் மூலம் ஆவின் பால் பொருட்களின் வெளிநாட்டு ஏற்றுமதி அதிமுக ஆட்சி காலத்திலேயே துவங்கியது என்றும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சர் நாசர் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக பாஜகவினர் பரப்பும் தகவல் வதந்தி என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. அதே போன்று பகிரப்பட்டு வரும் புகைப்படம் உண்மையானது என்றும் அறிய முடிகிறது.