“அள்ளிக் கொடுத்த "தல": கேரள வயநாடு நிலச்சரிவு நிவாரணப்பணிகளுக்கு தல அஜீத் சார்பில் ரூ. 35 கோடி நிதியுதவி அறிவிப்பு. நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நிதியுதவி அறிவிப்பு; மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் - அஜீத்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவிப்பு” என்ற தகவலுடன் ஜுலை 31ஆம் தேதியிட்ட புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக ரூபாய் 35 கோடி நிதியுதவி அளித்தார் என்று கூறி இதனை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் புதிய தலைமுறை அவ்வாறான நியூஸ்கார்டை வெளியிடவில்லை என்றும் தெரியவந்தது. இதன் உண்மை தன்மை குறித்து கண்டறிய நடிகர் அஜித்குமாரின் மேலாளரான சுரேஷ் சந்திராவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தேடியதில், ஜுலை 28ஆம் தேதி நடிகர் அஜித் நடித்து வெளியாகயுள்ள “விடாமுயற்சி” திரைப்படத்தின் நான்காவது ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக நேற்று(ஆக. 11) வரை “விடாமுயற்சி” திரைப்படத்தின் அப்டேட் மட்டுமே அவரது எக்ஸ் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதி தொடர்பான எந்த ஒரு தகவலும் இடம்பெறவில்லை.
மேலும், இது தொடர்பாக செய்திகள் ஏதும் வெளியிடப்பட்டுள்ளனவா என்று கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, மின்னம்பலம் மற்றும் Asianet Tamil உள்ளிட்ட ஊடகங்கள் நடிகர்கள் அஜித், விஜய், ரஜினி உள்ளிட்டோர் வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரண நிதி வழங்காதது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன. இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக புதிய தலைமுறை இச்செய்தியை வெளியிடவில்லை என்று தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.
புதிய தலைமுறை ஊடகத்தின் விளக்கம்
Conclusion:
நம் தேடலின் முடிவாக நடிகர் அஜித்குமார் வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக ரூபாய் 35 கோடி வழங்கியதாக வைரலாகும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்ட் போலி என்றும் நடிகர் அஜித் நிவாரண நிதி வழங்கவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.