175 ஏக்கர் நிலத்தை இந்திய ராணுவத்திற்கு தானமாக வழங்கினாரா நடிகர் சுமன்?
நடிகர் சுமன் 175 ஏக்கர் நிலத்தை இந்திய ராணுவத்திற்கு தானமாக வழங்கினார் என்ற தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 12 Aug 2023 1:45 PM IST175 ஏக்கர் நிலத்தை இந்திய ராணுவத்திற்கு நடிகர் சுமன் தானமாக வழங்கியதாக வைரலாகும் தகவல்
"இன்று அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று சொத்துக்காக அடித்து கொள்ளும் இந்த காலத்தில் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சொத்தை எழுதிக் கொடுத்த நடிகர் சுமன் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் திரைப்படத்தின் அறிமுக நிழ்ச்சியில் பேசிய நடிகர் சுமன், "நமது நாட்டின் உண்மையான வாட்ச்மேன்கள் ராணுவ வீரர்கள் தான். நாம் நிம்மதியாக வாழ அவர்கள் உறையும் பனியில் காவல் புரிகிறார்கள். அவர்களுக்குள் ஜாதி, மத பேதமில்லை. ஆனால் நாம்தான் ஜாதி, மதத்தின் பெயரால் கலவரம் செய்து கொண்டிருக்கிறோம்.
ஹைதராபாத் அருகில் எனக்கு 175 ஏக்கர் நிலம் உள்ளது. அதை கார்கில் போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களின் குடும்பத்துக்கு கொடுக்கலாம் என்று எனது மனைவி கூறினார். நானும் அந்த முடிவை வரவேற்றேன். நாம் உயிரோடு இருப்பதற்கு நாட்டின் எல்லையில் எந்தவித வசதியும் இல்லாமல் கடுமையான சூழ்நிலையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்புப்படை வீரர்கள் நாட்டை பாதுகாத்துவருகின்றனர். இதை உணர்ந்ததும் நான் முழுமனதோடு எனது 175 ஏக்கர் நிலத்தை கார்கில் போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு அளிக்க முன்வந்தேன்’’ என்று கூறினார்" என்று நடிகர் சுமனின் புகைப்படத்துடன் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, STV News 24x7 என்ற யூடியூப் சேனல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 5:49 முதல் 9:02 வரையிலான பகுதியில் பேசும் நடிகர் சுமன், "எனக்கு சொந்தமான 175 ஏக்கர் நிலம் ஒன்று ஹைதராபாத்தில் உள்ளது. அந்த நிலம் தொடர்பாக வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. அந்ந நிலத்தை ராணுவத்திற்கு வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்" என்றார்.
STV News 24x7 வெளியிட்டுள்ள காணொலி
தொடர்ந்து, இது குறித்து தேடுகையில், நியூஸ் 18 இது தொடர்பாக 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தியில், "தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூலமாக 117 ஏக்கர் நிலத்தை இந்திய ராணுவத்திற்கு நடிகர் சுமன் தானமாக வழங்கினார் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவலில் உண்மை இல்லை என்று நடிகர் சுமன் தெளிவுபடுத்தி உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த நிலம் தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு முடிந்ததும் ஊடகங்களில் தனிப்பட்ட முறையில் விவரங்களை வெளியிடுவேன்" என்றார். 175 ஏக்கர் நிலப்பரப்பில் ஆயுர்வேத ரிசார்ட் மற்றும் வெளிப்புற ஸ்டுடியோவைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக சுமன் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில் தான் இந்த நிலத்தை இராணுவத்தினரின் நலனுக்காக தானமாக வழங்க விரும்புவதாக தெரிவித்தார். இருப்பினும், இத்திட்டங்கள் ஒருபோதும் நடக்கவில்லை" என்று கூறப்பட்டிருந்தது. இதே செய்தி ஷாக்ஷி ஊடகத்திலும் வெளியாகியுள்ளது.
Conclusion:
நமது தேடலின் முடிவாக, நடிகர் சுமன் இந்திய ராணுவத்திற்கு 175 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கவில்லை என்றும் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.