“கட்சியை நிருத்தபோகும் விஜய்; கட்சியை நிருத்தி விட்டு மீண்டும் படத்துக்கும் செல்ல போகிறேன் என்று வாக்கு குடுத்தார் நடிகர் விஜய்” என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாக தேதி இல்லாத நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
முதற்கட்டமாக நியூஸ் கார்டில் இருக்கும் தகவல்களை ஆய்வு செய்ததில், “நிருத்தபோகும்” மற்றும் “குடுத்தார்” என்று தமிழில் எழுத்துப்பிழைகள் இருப்பதை காண முடிந்தது. தொடர்ந்து, இத்தகைய நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா என்று அதன் சமூக வலைதள பக்கங்களில் ஆய்வு செய்த போது அவ்வாறாக எந்த ஒரு செய்தியையும் அவர்கள் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, கடந்த மார்ச் 11ஆம் தேதி சிஏஏ சட்டத்தை(Archive) தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் அமல்படுத்த வேண்டாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடைசியாக, ஏப்ரல் 19ஆம்(Archive) தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நாளன்று, “நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார். கட்சியை நிறுத்துவது தொடர்பாக எந்த விதமான அறிவிப்பும் எக்ஸ் பக்கத்தில் வெளியாகவில்லை. மேலும், அது தொடர்பாக ஊடகங்களும் செய்தி வெளியிடவில்லை.
Conclusion:
நம் தேடலில் முடிவாக விஜய் தனது அரசியல் கட்சியை நிறுத்திவிட்டு திரைப்படம் நடிக்கப்போவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தந்தி டிவியின் நியூஸ் கார்ட் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.