நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கி அதன் கொள்கையை விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் விளக்கினார். மாநாட்டில் பேசிய விஜய், தனது அரசியல் எதிரிகள், கொள்ளை எதிரிகள் யார் என்பது குறித்து பேசியிருந்தார். அத்துடன், ‘எங்களுக்கு எந்த சாயமும் பூசாதீர்கள்’ எனக்கூறிவிட்டு திமுக, பாஜக ஆகிய கட்சிகளை நேரடியாகவே விமர்சித்து பேசினார்.
இதனைத்தொடர்ந்து தவெக குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், “நடிகர் விஜயை ஆட்டுவிக்கும் பாஜக. மொத்தமாக பாஜக ஏஜெண்டாக மாறிய விஜய். அதிமுக, பாமக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கை கோர்த்து திமுகவை எதிர்க்க பாஜக போட்ட ரகசிய திட்டம் அம்பலமானது. திராவிடத்தை ஒழிக்க கள்ளத்தனமாக அண்ணாமலையுடன் லண்டனில் சீக்ரெட் மீட்டிங் போட்ட நடிகர் விஜய்.
விஜயை விமர்சிக்கவோ கருத்து தெரிவிக்கவோ கூடாது என்று கண்டிப்புடன் ஆர்டர் போட்ட அண்ணாமலை…” என்று பல்வேறு தகவல்களை My India 24x7 என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நிற்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்றும் தமிழக வெற்றி கழகம் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதாக எந்த ஒரு தகவலும் இல்லை என்றும் தெரியவந்தது.
முதலில் வைரலாகும் தகவல் குறித்த உண்மை தன்மையைக் கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைவர் விஜயின் ஒப்புதலுடன் அறிக்கை ஒன்றை இன்று (நவம்பர் 18) எக்ஸ் தளத்தில் (Archive) வெளியிட்டு இருந்தார். அதில், “அதிமுகவுடன் கூட்டணி என்று வெளியான செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது” என்று குறிப்பிட்டு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி என்று செய்திகள் ஏதும் வெளியாகி உள்ளனவா என்பது குறித்து தேடிய போது அவ்வாறாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெரியவந்தது. மேலும், நடிகர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் அண்ணாமலையுடன் நிற்கும் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம்.
அப்போது, தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடிகர் விஜயை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசியதாக கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி Times of India, Zee News உள்ளிட்ட ஊடகங்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இரு புகைப்படங்களின் வேறுபாடு
Conclusion:
நம் தேடலின் முடிவாக தமிழக வெற்றி கழகம் பாஜக உடன் கூட்டணி வைக்கப்போவதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் லண்டனில் அண்ணாமலையை ரகசியமாக சந்தித்த விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் என்று வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.