“பள்ளிக்கூடம் கட்ட நிதி திரட்டிய போது…” என்ற கேப்ஷனுடன் நடிகை ஜோதிகாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், ஜோதிகா கவர்ச்சிகரமான உடையில் மேலாடை அணியாத ஆண் ஒருவரிடம் “காமசூத்ரா” புத்தகத்தை பெறுவது போன்று உள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, JyotikaSuriyaa என்ற எக்ஸ் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வைரலாகும் அதே புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.
அதில், ஜோதிகா நாகரீகமான உடையில் Azhar Ali Sayed என்பவர் எழுதிய “Eat Your Cake Lose Your Weight” என்ற புத்தகத்தை ஆண் ஒருவரிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார். தொடர்ந்து, அப்புகைப்படத்தை கவனமாக ஆய்வு செய்ததில் Eat Your Cake Lose Your Weight புத்தகத்தின் அட்டைப்படத்தில் இருக்கும் நபரும், புத்தகத்தை ஜோதிகாவிற்கு வழங்குபவரும் ஒரே நபர் என்பது தெரியவந்தது. இதில் Azhar Ali Sayed மேலாடையுடன் இருப்பதையும் நம்மால் காண முடிகிறது.
இதனையடுத்து “Azhar Ali Sayed Jothika” என்ற கீவர்டை பயன்படுத்தி கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது, “Eat Your Cake Lose Your Weight" என்ற எனது புத்தகத்தின் நகலை நடிகை ஜோதிகாவுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! இந்தப் புத்தகம் முழுமையான ஊட்டச்சத்துக்கான எனது ஆர்வத்தையும், அவர்கள் விரும்பும் உணவுகளை அனுபவிக்கும் அதே வேளையில் ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி இலக்குகளை அடைய உதவுவதற்கான எனது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது! என்று Azhar Ali Sayed தனது LinkedIn பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் Azhar Ali Sayed என்பவர் எழுதிய Eat Your Cake Lose Your Weight என்ற புத்தகத்தை நடிகை ஜோதிகா அவரிடம் இருந்தே பெற்றுக்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது. மேலும், வைரலாகும் புகைப்படத்தை Photo Forensic முறையில் ஆய்வு செய்தபோது, அப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் கவர்ச்சி உடை அணிந்த நடிகை ஜோதிகா “காமசூத்ரா” புத்தகத்தை ஆண் ஒருவரிடம் இருந்து பெற்றுக்கொள்வது போல் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.