“என்னக்கா ஜி மேலயே அட்டாக்கா” என்ற கேப்ஷனுடன் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், நடிகையும் பாஜக தலைவருமான குஷ்பு, “என்னை பொறுத்த வரை..மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல!” என்று கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது மனைவியான யசோதா பென்னை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு குஷ்பு இதனைக்கூறியதாக இத்தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இதுகுறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி Cinema Vikatan இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், செப்டம்பர் 21ஆம் தேதி குஷ்பு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லாவற்றுக்கும் மேல் தன் குடும்பத்தை வைத்து மதித்துப் போற்றுபவன்தான் உன்னதமான மனிதன். தன்னுடைய குடும்பத்தை அளவுகடந்து நேசிக்கும்போது அவனது தனிப்பட்ட விருப்பங்கள் தேவைகள் எல்லாம் இரண்டாம்பட்சமாகிவிடும். வாழ்க்கையின் முக்கிய அங்கமான திருமண வாழ்வில் நிறைய மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும்.
தவறுகளும் நடக்கத்தான் செய்யும். ஆனால், இந்த விஷயங்களை ஒரு மனிதன் அவனது குடும்பத்தை விலக்கி வைப்பதற்கான உரிமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு பந்தத்தில் காலப்போக்கில் அன்பு குறையலாம். ஆனால், இருவருக்குமிடையேயான பரஸ்பர மரியாதைக் குறையக் கூடாது.
தன் குழந்தைகளை அன்போடு பார்த்துக் கொள்ளும் மனைவியை மதிப்பவன்தான் உண்மையான மனிதன். அன்றி மரியாதையின்றி அவர்களை விட்டுவிட்டு செல்பவன் உன்னதமான மனிதனல்ல. தன்னுடைய குழந்தைகள் இதனால் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்பதை அறியாத இவர்கள் சுயநலவாதிதான். மனிதநேயமும் சரியான புரிதலும் இல்லாதத் தனத்தால்தான் இதை செய்கிறார்கள்…” என்று நீண்ட பதிவை பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அறிவித்தார். இந்நிலையில், அவரது பெயரைக் கூறாமல் மறைமுகமாக குஷ்பு ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார் என்று நம்மால் கூற முடிகிறது. இதே கண்ணோட்டத்தில் தினமலர் ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக பிரதமர் மோடியின் குடும்ப வாழ்க்கையை குறிப்பிட்டு பாஜக தலைவர் குஷ்பூ கருத்து தெரிவித்ததாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் அது உண்மையில் நடிகர் ஜெயம் ரவி குறித்து குஷ்பூ தெரிவித்த மறைமுக கருத்து என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.