சவுதி அரேபியாவின் மக்காவில் உள்ளது ஜம் ஜம் தண்ணீரின் ஊற்று. ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய ஊற்றில் இன்று வரை ஜம் ஜம் நீர் சுரந்துகொண்டிருக்கிறது. உலக நாடுகளில் இருந்து சவுதி அரேபியா சென்று ஹஜ் மற்றும் உம்ரா மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் அங்கிருந்து ஜம்ஜம் நீரை வாங்கி வந்து தங்களது உறவினர்களுக்கு பேரிச்சம் பழத்துடன் கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், “5 லிட்டர் ஜம் ஜம் தண்ணீர் இங்கு இந்தியாவில் தயாராகின்றன...نعوذ بالله அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்…” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், டிரம்மில் இருந்து வரக்கூடிய நீரை பிடித்து ஜம்ஜம் நீரை போன்று பேக்கிங் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும், இதுபோன்ற ஜம் ஜம் தண்ணீர் இந்தியாவில் தயார் செய்யப்படுகிறது என்று கூறி இதனை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இந்நிகழ்வு சவுதி அரேபியாவில் 2017ஆம் ஆண்டு நடைபெற்றது என்றும் தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Misurata Today என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2017ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. மேலும் அதில், “திடீர் ஆய்வின் போது மக்காவில் ஒரு கும்பல் ஜம் ஜம் நீருடன் கலப்பட நீரை நிரப்புகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தேடியபோது Sada News என்ற ஊடகத்தில் 2017ஆம் ஆண்டு வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “ஜம்ஜாம் தண்ணீரை கலப்படம் செய்து விற்பனை செய்யும் தொழிற்சாலையை நடத்தி வந்த வெளிநாட்டவரை பாதுகாப்பு ரோந்துப் படையினர் கைது செய்துள்ளனர். அல்-ஜனனி கைது செய்யப்பட்டு உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். கலப்படம் செய்யப்பட்ட தண்ணீர் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், Saudi Arabia News என்ற எக்ஸ் பக்கத்திலும் 2017ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் தேதி வைரலாகும் அதே முழு நீளக் காணொலி பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தொழில் ரீதியாக கலப்படம் செய்யப்பட்ட ஜம் ஜம் தண்ணீரை விநியோகித்து விற்கும் தொழிற்சாலையை நடத்தும் வெளிநாட்டவரை பாதுகாப்பு ரோந்து படையினர் கைது செய்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காணொலியில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி பேசுவதும் பதிவாகியுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் இந்தியாவில் ஜம்ஜம் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வைரலாகும் காணொலி உண்மையில் 2017ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.