AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் உண்மைக்கு மாறான மற்றும் இயற்கைக்கு மாறான பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் பெரிதும் பரவி வருகிறது. இந்நிலையில், “கடலில் உள்ள அற்புத உயிரினங்கள். இதுமாதிரியெல்லாம் உயிரினங்கள் கூட கடலில் இருக்குமா... !! படைப்புகளை பார்த்து வியக்கின்ற நாம் படைத்தவனை நினைத்து பார்க்கின்றோமா? சிந்திப்போம்… இனியாவது......நேசத்துடன்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், மீனவர்கள் கடலில் பிடித்த உயிரினங்களை காண்பிப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.
முதலில் காணொலியை ஆய்வு செய்ததில், அதில் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலிகளில் இருக்கக்கூடிய சிதைவுகள் காணப்பட்டது. மேலும், காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, AI மூலம் உருவாக்கப்பட்ட காணொலிகளை வெளியிடக்கூடிய mysticworld என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலியின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. இவற்றைக் கொண்டு இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, தேடுகையில் இதே போன்று வினோத உயிரினங்கள் கடலில் பிடிக்கப்பட்டது போன்ற பல்வேறு வகையான காணொலிகளை voidstomper என்ற AI தொழில்நுட்பத்தால் காணொலிகளை உருவாக்கக்கூடிய மற்றொரு இன்ஸ்டாகிராம் பக்கமும் வெளியிட்டுள்ளது.
இறுதியாக, வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்று Hive Moderation மற்றும் True Media ஆகிய இணையதளங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்தது.
Hive Moderation இணையதள ஆய்வு முடிவு
Conclusion:
நம் தேடலின் முடிவாக கடலில் உள்ள அற்புத உயிரினங்கள் என்று சமூக வலைதளங்களில் உண்மை என்று கூறி வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.