திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை அமைந்தகரையில் கடந்த ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பொன்முடி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், “திமுக சட்டத்துறை மாநாடு அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் இல்லை. இந்த மாநாட்டை BJP அல்லது வேற எந்த கட்சியானது நடத்தி இருந்தால் ஆ. ராசா முதல் ரவிக்குமார் வரை நமக்கான பாடத்தை எடுத்திருப்பார்கள் தமாசா இருந்திருக்கும்..” என்ற கேப்ஷனுடன் புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த திரையில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் அம்பேத்கரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்றும் தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய திமுகவின் சட்டத்துறை மாநாடு தொடர்பான காணொலி குறித்து யூடியூபில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இதுதொடர்பாக கடந்த ஜனவரி 18ஆம் தேதி புதிய தலைமுறை ஊடகம் திமுகவின் சட்டத்துறை மாநில மாநாடு குறித்த நேரலை காணொலியை வெளியிட்டிருந்தது.
அதில், 26:00 பகுதியில் அம்பேத்கர் புகைப்படம் இடம்பெற்றுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து, 26:00 முதல் 26:35 வரையிலான பகுதியில் அம்பேத்கர், பெரியார், கருணாநிதி, அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் மாறி மாறி வருவதை நம்மால் காணமுடிகிறது.
திமுக மாநாட்டில் இடம்பெற்றுள்ள அம்பேத்கரின் புகைப்படம்
Conclusion:
நம் தேடலின் முடிவாக திமுக சட்டத்துறை மாநாட்டில் அம்பேத்கர் புகைப்படம் இடம்பெறவில்லை என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அம்பேத்கர் உள்பட பெரியார், கருணாநிதி, அண்ணா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.