“பாஜக ஆட்சி செய்யும் உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபரை அரசு ஆம்புலன்ஸ் வெளியே தொங்க விட்டு சென்றது. சிறிது தூரம் சென்றதும் நோயாளி நடுரோட்டில் படுக்கை ஸ்ட்ரெச்சருடன் விழுந்துவிட்டார். அதையும் கண்டு கொள்ளாமல் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தில் இருந்து பறந்தது. கீழே விழுந்த நோயாளி கூறுகையில், அரசு ஆம்புலன்ஸ்க்கு 500 ரூபாய் தான் தர வேண்டும் என்றும் ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் 1000 ரூபாய் கேட்டதாகவும், இதனால் நோயாளியின் உறவினருக்கும் ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறினார்…” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இறந்தவரின் உடலை போராட்டத்திற்காக ஓடும் ஆம்புலன்ஸில் இருந்து குடும்ப உறுப்பினர்களே தள்ளிவிட்டது தெரியவந்தது.
வைரலாகும் காணொலி குறித்த உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இது தொடர்பாக News 18 ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி தேசிய நெடுஞ்சாலையை மறிக்க முயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News 18 வெளியிட்டுள்ள செய்தி
இறந்த ஹிருதய் லால், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) மது அருந்துவது தொடர்பான தகராறில் அவர் கொடூரமாக தாக்கப்பட்டு, அவரது கால்விரல்கள் நசுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் சிகிச்சைக்காக லக்னோவிற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4), அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டபோது, அவரது குடும்பத்தினர் வாகனத்தை நிறுத்தி, உடலை சாலையில் வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். நெடுஞ்சாலையில் வைக்கப்படுவதற்கு முன்பு ஆம்புலன்ஸ் உடலை இழுத்துச் செல்வதைக் காட்டும் காணொலி வைரலானது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, குடும்ப உறுப்பினர்களும் அக்கம்பக்கத்தினரும் சாலையில் கூடி, உடலைச் சுற்றி அமர்ந்து போக்குவரத்தை நிறுத்த முயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் உடலை அகற்றி போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தினர். பின்னர் இறுதிச் சடங்குகள் காவல்துறையினர் மேற்பார்வையில் செய்யப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Zee News ஊடகமும் வெளியிட்டுள்ளது. மேலும், இறந்தவரின் உடல் ஒடும் ஆம்புலன்ஸிற்கு வெளியே இழுத்துச் செல்லும் செய்தியை NDTV ஊடகமும் காணொலியாக வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலில் உத்தரப்பிரதேசத்தில் இறப்பிற்கு நீதி கேட்டு உறவினர்கள் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பு ஓடும் ஆம்புலன்ஸில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்ட காணொலியை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கேட்ட தொகையை கொடுக்காததற்காக நோயாளியை ஆம்புலன்ஸில் இருந்து வெளியே தொங்கவிட்டு சென்றதாக தவறாக பரப்பி வருகின்றனர் என்று தெரிய வந்தது.