இஸ்ரேல் - காசா இடையேயான போர் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில், இஸ்ரேல் தனது ராணுவ பலத்தை கொண்டு காசாவை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட விமானங்களை ஓட்ட மறுத்த இரண்டு அமெரிக்க இராணுவ விமானிகள் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
வைரலாகும் பதிவு
அதில், ராணுவ உடை அணிந்த இருவரை ஒரு அறைக்குள் இருந்து சிலர் வெளியே இழுத்து வரும் காட்சி பதிவாகியுள்ளது. அதில் முழக்கமிடும் பெண் ராணுவ அதிகாரி, “பாலஸ்தீனிய இன அழிப்பை நிறுத்துங்கள், அமெரிக்க அரசாங்கம் இந்த இன அழிப்பிற்கு துணை போவதாக” கூறுகிறார்.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் பாலத்தீன இன அழிப்பை எதிர்த்து அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரிகள் செனட் கூட்டத்தில் முழக்கமிட்ட போது எடுக்கப்பட்ட காணொலி என்று தெரிய வந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Viva Viva Palestina என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி வெளியிடப்பட்டிருந்தது. அதில், "காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக செனட் குழு உறுப்பினர்களைக் கண்டித்து, அமெரிக்க இராணுவ வீரர்கள் அந்தோணி அகுய்லர் மற்றும் ஜோசபின் கில்பியூ ஆகியோர் செனட் முழக்கமிட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, Al Jazeera English ஊடகம் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, காசா மீதான இஸ்ரேலின் போருக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதைக் கண்டித்து செனட் கூட்டத்தில் அமெரிக்க ராணுவ வீரர்களான அந்தோணி அகுய்லர் மற்றும் ஜோசபின் கில்பியூ முழக்கமிட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விரிவான செய்தி வெளியிட்டுள்ள TRT World ஊடகத்தின் படி, இஸ்ரேலிய ராணுவ மேற்பார்வையின் கீழ் உதவித் தளங்களை நடத்தும் சர்ச்சைக்குரிய அமெரிக்க ஆதரவு ஒப்பந்ததாரரான காசா மனிதாபிமான அறக்கட்டளைக்கு (GHF) எதிரான தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர் அகுய்லர், இதற்கு பின்னர் பாலஸ்தீன உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு முக்கியஸ்தராக மாறிவிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக ஆயுதங்கள் நிரப்பப்பட்ட விமானங்களை இஸ்ரேலுக்கு கொண்டு செல்ல மறுத்த இரண்டு அமெரிக்க ராணுவ விமானிகள் கைது செய்யப்பட்டதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அவர்கள் இருவரும் பாலத்தீன இன அழிப்பிற்கு எதிராக செனட் கூட்டத்தில் முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்டனர் என்று தெரியவந்தது.