அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் சமூக வலைதளங்களில் 1 நிமிடம் 38 வினாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை பதிவிட்டு வருகின்றனர். அதில், சென்னை, தாம்பரம், திருமலை நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து சன் நியூஸ் செய்தியாளர் நேரலை வழங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, வெள்ள பாதிப்பு குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஏரி, குளங்களை அளித்தது தான் சாலையில் இதுபோன்று தண்ணீர் ஆறு போல் ஓடுவதற்கு காரணம்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தவர்கள் நாங்கள். வீட்டினுள் தண்ணீர் ஓடுகிறது, கட்டிலில் அமர்ந்தபடியே தண்ணீரை தொடக்கூடிய வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளனர். எங்கள் மாவட்டத்திலும் இது போன்ற ஒரு வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று திராவிட கட்சிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்று பதிலளிக்கிறார்.
Fact-check:
இந்த ஆடியோவைக் கேட்கும் நையாண்டியாக எடிட் செய்யப்பட்டிருப்பதை நம்மால் அறிய முடிகிறது. இந்நிலையில், காணொலியில் இருக்கக்கூடிய தகவல்களைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி சன் நியூஸ் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றி இருந்த உண்மையான காணொலி நமக்கு கிடைத்தது. மொத்தம் 8 நிமிடங்கள் 26 வினாடிகள் ஓடக்கூடிய அக்காணொலியின் 2:31 முதல் 3:30 வரையிலான பகுதியில் இருக்கக்கூடிய ஆடியோவை திரித்து வெளியிட்டுள்ளனர்.
உண்மையான காணொலியில், செய்தியாளர் கேட்கக்கூடிய கேள்விக்கு, "எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் இந்த நிலை தான் திருமலை நகரில் தொடர்கிறது. இதற்கு காரணம் செம்பாக்கம் ஏரி நிரம்பும் போது 60 அடி அகலத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது தான். அந்தத் தண்ணீர் அருகில் இருக்கும் ஏரியில் கலந்து 5 அடி அகல கால்வாயில் செல்வதால், தண்ணீர் இப்பகுதிக்குள் புகுந்து வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கும். மேலும் பாம்பு, பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அனைத்தும் வீட்டினுள் புகுந்து விடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது" என்று பதில் அளிக்கிறார்.
Conclusion:
இறுதியாக, நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் சன் நியூஸ் வெளியிட்ட பேட்டியின் உண்மையான ஆடியோவை திரித்து நையாண்டிக்காக சமூக வலைதளங்களில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் பரப்பி வருகின்றனர் என்பதை நம்மால் கூற முடிகிறது.