"பட்ஜெட் குறித்த கேள்விக்கு ஆடு அண்ணாமலையின் பதில். நாதஸ் திருந்திட்டானா.?” என்ற கேப்ஷனுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடர்பான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நிருபர் பட்ஜெட் குறித்து எழுப்பிய கேள்விக்கு, “பட்ஜெட்டில் புதிதாக ஒன்றும் இல்லை. விலை உயர்வு, விலை உயர்வு, விலை உயர்வு. வரி உயர்வு, வரி உயர்வு, வரி உயர்வு” என்று அண்ணாமலை பதிலளிக்கிறார். நேற்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஒன்றிய பட்ஜெட் குறித்து அண்ணாமலை இவ்வாறு கருத்து தெரிவித்ததாக கூறி இக்காணொலியை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலி 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்து என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இதுகுறித்து யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “BJP Annamalai Speech |விலை உயர்வு.. வரி உயர்வு..இது தான் பட்ஜெட்..அண்ணாமலை ஆவேசம் | TN Budget 2022” என்ற தலைப்பில் ABP Nadu 2022ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அக்காணொலியின் தொடக்கத்தில் தமிழ்நாடு அரசை விமர்சிக்கிறார் அண்ணாமலை. தொடர்ந்து, 2:55 பகுதியில் பட்ஜெட் குறித்து நிருபர் அண்ணாமலையிடம் கேட்கவே, “பட்ஜெட்டில் புதிதாக ஒன்றும் இல்லை. விலை உயர்வு, விலை உயர்வு, விலை உயர்வு. வரி உயர்வு, வரி உயர்வு, வரி உயர்வு இது இரண்டு மட்டும் தான் தமிழ்நாடு அரசினுடயை பட்ஜெட்டில் பார்ப்பீர்கள், வேறு எதுவும் இருக்காது” என்கிறார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்தை 2024-25 ஒன்றிய பட்ஜெட்டுடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.