சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சூழலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டியும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்பதற்காக தன்னை சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை நடத்துவதாகக் கூறியிருந்தார்.
அதன்படி நேற்று (டிசம்பர் 27) கோவையில் உள்ள அவரின் வீட்டின் முன்பாக நின்று தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். இந்நிலையில், “வலி தாங்க முடியாம கோமியம் (சிறுநீர்) ஊத்திடுச்சி போல.. ஏன்டா இவ்ளோ க்ளோசப்ல போட்டோ எடுப்பீங்க!” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) அண்ணாமலையின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், அண்ணாமலை வேஷ்டியின் முன் பகுதி ஈரமானது போன்று உள்ளது. இதனைக் கொண்டு அவர் வேஷ்டியில் சிறுநீர் கழித்ததாக கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டர் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
புகைப்படத்தின் உண்மை தன்மையைக் கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, saimumna_bjp_ மற்றும் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களில் வைரலாகும் புகைப்படத்தை போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில், வைரலாகும் புகைப்படத்தில் உள்ளது போன்று வேஷ்டியில் ஈரம் இல்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, அவர் சாட்டையால் அடித்துக் கொண்ட நேரலை காட்சியை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டிருந்தது. அதனை ஆய்வு செய்கையில் அதில் எந்த பகுதியிலும் அவரது வேஷ்டியில் ஈரம் இல்லை என்பது தெரியவந்தது.
Conclusion
முடிவாக, நம் தேடலில் சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை தனது வேஷ்டியில் சிறுநீர் கழித்ததாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.