விமானத்தின் கார்கோ பகுதியில் இருந்து எடுத்து வரப்படும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் எடுத்து வைப்பது வழக்கம். இந்நிலையில், ஜப்பான் விமான நிலையத்தில் இப்பொருள்கள் பத்திரமாக எடுத்து வைக்கப்படுவதாகவும் அதே சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பற்ற முறையில் தூக்கி வீசப்படுவதாகவும் 30 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக முதலில் சென்னை என்று கூறப்படும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, இருப்பது சவுதி அரேபிய விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு என்று ஏப்ரல் 14ஆம் தேதி 2015ஆம் ஆண்டு தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அதே ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி அராப் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளைத் தவறாக கையாண்டதற்காக நான்கு பணியாளர்களை சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையம் (GACA ) பணிநீக்கம் செய்துள்ளது.
சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையத்தின் விசாரணையில் பணி நீக்கம் செய்யப்பட்ட நான்கு பேரில் இருவர் மேற்பார்வையாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரங்களை ஆணையம் வெளியிடவில்லை" என்று கூறப்பட்டுள்ளது. தி டெலிகிராப் செய்தி நிறுவனமும், சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை தவறான முறையில் கையாண்ட ஊழியர்கள் என்ற கேப்ஷனுடன் முகநூலில் வைரலாகும் காணொலியை பதிவிட்டுள்ளது.
தி டெலிகிராப் பதிவு
தொடர்ந்து, ஜப்பான் என்று கூறப்படும் காணொலியை ஆய்வு செய்ததில், அது சீனாவில் நடைபெற்றது என்று சீன பத்திரிகையாளர் ஷென் ஷிவேய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "சிலர் இதனை ஜப்பான் என்று தவறாக பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் இது சீனாவின் Zhengzhou Xinzheng சர்வதேச விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட காணொலி. அதில் இருக்கக்கூடிய எழுத்துக்கள் சீன மொழியில் இருப்பதை காணலாம்" என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.
ஷென் ஷிவேயின் விளக்கம்
Conclusion:
நமது தேடலின் முடிவாக பகிரப்பட்டு வரும் காணொலியில் இருப்பது ஜப்பான், சென்னை விமான நிலையங்கள் இல்லை என்றும் அவை சீனா மற்றும் சவுதி அரேபிய விமான நிலையங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.