வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை இஸ்லாமியர்கள் கொடுமைப்படுத்துவதாகவும் கொடூரமாக கொலை செய்வதாகவும் கூறி சமூக வலைதளங்களில் பல்வேறு காணொலிகளும் தகவல்களும் வைரலாகி வருகின்றன. இச்சூழலில், “பங்களாதேஷில் ISKCON கோவிலை நடத்தி அவர்களுக்கு துயர் வந்தபோதெல்லாம் துடைத்த ஒரு சன்யாசியை, அங்குள்ள முஸ்லிம்கள் அந்த கோயிலை எரித்த பின் அவரை சித்தரவதை செய்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். உண்மையாகவே பங்ளாதேஷ் இஸ்லாமியர்கள் இரக்கமற்ற ஜந்துக்களே!” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், இறந்து சிதைக்கப்பட்டு இருக்கும் உடலை பலரும் சேர்ந்து தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் அது அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷாஹிதுல் இஸ்லாம் ஹிரோன் (Shahidul Islam Hiron) என்பவருடைய உடல் என்பது தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Rokun Shehaby Rokon என்ற ஃபேஸ்புக் பயனர் வைரலாகும் அதே காணொலியை கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி பதிவிட்டு இருந்தார். அதில், “ஜெனைடா மாவட்டத்தின் பொரஹத்தி யூனியன் பரிஷத் தலைவர் ஷாஹிதுல் இஸ்லாம் ஹிரோன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட அவாமி லீக் கட்சி தலைவர்
தொடர்ந்து கிடைத்த தகவலைக் கொண்டு தேடுகையில், Dhaka Post ஊடகம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “ஜெனைடா மாவட்டத்தில் உள்ள ஷாஹிதுல் இஸ்லாம் ஹிரோனின் வீட்டை சூழ்ந்த போராட்டக்காரர்கள் அவர் வீட்டில் மூன்றாவது தளத்தில் இருக்கும் போது வீட்டிற்கு தீ வைத்தனர். பிறகு அவர் இறக்கவே அவரது உடலை வெளியே எடுத்து வந்த போராட்டக்காரர்கள் Payra Chattar என்ற இடத்தில் தொங்கவிட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே தகவலை, bipasbd என்ற யூடியூப் சேனலிலும் காணொலியாக வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக அவரது உடல் தொங்கவிடப்பட்ட Payra Chattar என்ற இடத்தை Geolocate செய்து இச்சம்பவத்தை நியூஸ் மீட்டர் ஆங்கிலம் உறுதிசெய்துள்ளது.
Geolocate செய்யப்பட்ட தரவுகள்
Conclusion:
நம் தேடலின் முடிவாக வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோயிலின் சன்னியாசியை கொடூரமாக கொலை செய்த இஸ்லாமியர்கள் என்று வைரலாகும் காணொலியில் இருப்பது வங்கதேச அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷாஹிதுல் இஸ்லாம் ஹிரோன் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.