"இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்ட படுக்கையில் இருந்தார். தங்கள் குழந்தைகளை கொன்ற பள்ளி குண்டுவெடிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய பாலஸ்தீன பெண்களை ஏரியல் ஷரோன் கேலி செய்தார். ஆக்கிரமிப்பை எதிர்க்கும் பாலஸ்தீனியர்கள் இப்போது புழுக்களின் உணவாகிவிட்டார்கள் என்று ஏரியல் ஷரோன் ஆணவத்துடன் கூறினான் ஏரியல் ஷரோனை அவர் இறப்பதற்கு முன் புழுக்களின் உணவாக மாற்றினான் இறைவன் அவரின் கண்களில் இருந்தும், காதில் இருந்தும் புழுக்கள் வெளியேற செய்தான்…" என்ற தகவலுடன் வயதான நபர் ஒருவரின் கண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Passion of lyf என்ற யூடியூப் சேனலில் இதன் முழுநீள காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதன் 2:03 முதல் 2:15 வரையிலான பகுதியில் உருது மொழியில் பேசும் நபர், "அல்லாஹ் இவருடைய பாவத்தை மன்னிக்கட்டும். காவல்துறையில் இருந்த இவர் என்ன லஞ்சம் வாங்கினார், என்ன அநியாயம் செய்தார் என்று கடவுள் தான் அறிவான். இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்த இறைவனே, இவருடைய பாவங்களை மன்னித்து அருள் புரிவாயாக!!!" என்று கூறுகிறார்.
இதன் மூலம் வைரலாகும் காணொலியில் இருப்பவர் காவல்துறையில் இருந்தவர் என்று கூற முடிகிறது. மேலும், அவர் பேசும் உருது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் அதிகம் பேசக்கூடிய மொழி. ஆனால், இஸ்ரேலில் ஹீப்ரூ மற்றும் அரபு மொழிகளே பயன்படுத்தப்படுகிறது. இவற்றைக் கொண்டு வைரலாகும் காணொலி இஸ்ரேலில் எடுக்கப்பட்டது இல்லை என்று கூற முடிகிறது. வைரலாகும் காணொலியில் இருக்கும் நபரின் முழு விவரம் மற்றும் எங்கு எடுக்கப்பட்டது போன்ற தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஏரியல் ஷரோன் 2014ல் மரணித்தார். 2006ல் மாரடைப்பு ஏற்பட்டு 8 வருடங்கள் கோமாவில் இருந்த அவர் சிறுநீரக செயலிழப்பால் மரணமடைந்தார். மேலும், அவர் கண்களைத் திறந்து விரல்களை அசைத்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். ஆனால் அவர் குறித்த காணொலியோ, புகைப்படமோ ஊடகங்களில் வெளியாகவில்லை. இஸ்ரேலில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கோமாவில் இருக்கும் நபரால் பேசவோ, உடலை அசைக்கவே இயலாது. ஆனால், வைரலாகும் காணொலியில் இருப்பவர் உடலை அசைப்பதோடு, வலியால் முனங்கவும் செய்கிறார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்ட படுக்கையில் இருந்த இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் என்று கூறி வைரலாகும் காணொலியில் இருப்பது ஏரியல் ஷரோன் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.