“தியாகத் திருநாள் வந்தாலே உலகலாவிய இஸ்லாம் போபியா ஊடகங்கள் முஸ்லிம்களை விமர்சித்து, சலசலப்பை ஏற்படுத்த ஒரு துரும்பு கிடைத்து விடுகின்றது. உலகப் பணக்காரரான பில்கேட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு டுவீட்டின் மூலம் இந்த ஊடகங்களின் வாய்க்கு மண்ணை அள்ளி வீசியுள்ளார். முஸ்லிம்கள் கால்நடைகளை அறுத்து பலியிடுவதற்கு எதிராக வெறுப்பூட்டும் பிரச்சாரங்கள் சர்வதேச ஊடகங்களில் முன்னெடுக்கப்படுவதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
இங்கே KFC, McDonald's, Burger King மற்றும் கென்டக்கி போன்ற மிகப் பெரிய உணவகங்களில் பணக்கார வர்க்கத்தின் பசி தீர்ப்பதற்காகவும், கோடிக்கணக்காக பணம் பார்ப்பதற்காகவும் தினமும் பல லட்சக்கணக்கான விலங்குகள் அறுக்கப்படுகின்றன. அதை கேட்க பார்க்க ஆளில்லை. ஆனால், முஸ்லிம்கள் அவர்களது பெருநாளின் போது ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் இலவசமாக உணவளிக்கும் நன்நோக்கோடுதான் கால்நடைகளை அறுத்துப் பலியிடுகின்றனர். நாம் உண்மையில் புத்தியோடுதான் விமர்சிக்கின்றோமா? அல்லது புத்தியை கழட்டி வைத்து விட்டுத்தான் விமர்சிக்கின்றோமா என்று தெரியவில்லை” என்று மைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய அவ்வாறாக உண்மையில் பில்கேட்ஸ் பதிவிட்டுள்ளாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பில் கேட்ஸ் இவ்வாறான கருத்தை தெரிவித்ததாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. மேலும், இவர் வெளியிட்டதாக எக்ஸ் பதிவு ஒன்று ஏற்கனவே ஆங்கிலத்தில் வைரலானது நம் தேடலில் தெரியவந்தது.
தொடர்ந்து, அது உண்மையில் அவர் வெளியிட்ட பதிவுதானா என்பதை உறுதிப்படுத்த பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் இணைந்து நடத்தும் தொண்டு நிறுவனமான Gates Foundationனிடம் நியூஸ் மீட்டர் மின்னஞ்சல் வாயிலாக விளக்கம் கேட்டது. அதற்கு பதிலளித்த Gates Foundation, பில் கேட்ஸ் அவ்வாறாக எதையும் தெரிவிக்கவில்லை என்று உறுதிபடுத்தியது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகையின் போது பலியிடப்படும் கால்நடைகளையும் பன்னாட்டு உணவகங்களில் அறுக்கப்படும் கால்நடைகளையும் ஒப்பிட்டு மைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் டுவிட்டர் பதிவு வெளியிட்டதாக வைரலாகும் தகவல் போலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.