“பாஜக ஐடி மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்ட செயலர் மீது கொடூரமான தாக்குதல் திரு. ராஜேஷ் பிஜு இன்று மாலை பாஜக பிரமுகர் வீட்டு முன்பு... சென்னை கிழக்கு நங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ சக்ரா மருத்துவமனையில் ராஜேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். பைக்கில் வந்த தமிழக போலீஸ்காரர் வெறுமனே ஓட்டிச் சென்றார்” என்ற கேப்ஷனுடன் நபர் ஒருவரை பலரும் சேர்ந்து தாக்கும் சிசிடிவி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய இருக்கும் தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இது தொடர்பாக தினகரன் செய்தி வெளியிட்டு இருந்தது. அதில், “சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பையா பொதுவெளியில் மது ஒழிப்பு குறித்து பேசிவிட்டு தனது உணவகத்திற்குள் மது அருந்தும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனை திட்டமிட்டு பரப்பியதாக அதே மாவட்டத்தை சேர்ந்த பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜேஷின் வீட்டிற்கு ஆதரவாளர்களுடன் சென்று சுப்பையா தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் காயமடைந்த ராஜேஷ், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுப்பையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து பழவந்தாங்கல் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்” என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் வைரலாகும் தகவல் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் என்று தெரியவந்தது. வைரலாகும் காணொலியில் உள்ள புகைப்படத்துடன் இதே செய்தியை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகமும் அதே தேதியில் வெளியிட்டுள்ளது. மேலும், இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில்(Archive) நேற்று(ஏப்ரல் 15) “வைரலாகும் காணொலி பழையது, இச்சம்பவம் நங்கநல்லூரில் 2023ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி நடைபெற்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முறையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தவறான தகவலை பகிர வேண்டாம்” என்று விளக்கம் அளித்துள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக பாஜக தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் பழையது என்றும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இருவருமே பாஜகவை சேர்ந்தவர்கள் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.