ரபேல் விமானத்தின் பாகங்களைக் கொண்டு கடிகாரம் தயாரிக்கப்பட்டதாக அண்ணாமலை கூறியது உண்மையா?
பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த கைக்கடிகாரம் ரபேல் விமானத்தின் பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக கூறிய நிலையில் அது உண்மை அல்ல என்பது தற்போது தெரிய வந்துள்ளது
By Ahamed Ali Published on 21 Dec 2022 7:15 PM ISTபாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருந்த கைக்கடிகாரம் குறித்து கடந்த 17-ம் தேதி கோவையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "ரபேல் விமானம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதனை ஓட்டும் பாக்கியம்தான் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், அதை வைத்து உருவாக்கப்பட்ட வாட்ச்சை அணியும் பாக்கியம் கிடைத்துள்ளது. நான் தேசியவாதி அதனால், இந்த வாட்சை அணிகிறேன். இதை வைத்து பிரிவினைவாதிகள்தான் சர்ச்சை செய்வார்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "உலகில் இது போல 500 வாட்ச்சுகள் தான் உள்ளது. இதில், என்னுடைய வாட்ச் 149-வது வாட்ச்சாகும். அது ஒரு கலெக்டட் எடிஷன், ஸ்பெஷல் எடிஷன். நான் கட்டி இருக்கும் வாட்ச் ரபேல் விமான பாகங்களை வைத்து செய்தது. இதை நான் உயிருள்ள வரை கட்டி இருப்பேன்" என்றார்.
Fact-check:
இந்நிலையில், இவர் கூறியது உண்மையா என்பதைக் கண்டறிய ரபேல் கைக்கடிகாரம் குறித்து கூகுளில் தேடியபோது, அது பெல் அண்ட் ராஸ்(Bell&Ross) என்ற நிறுவனம் தயாரித்த BR 03 RAFALE வகை கைக்கடிகாரம் என்பது தெரியவந்தது. மேலும், இது ரபேல் விமானத்தின் பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை(கூகுள் சர்ச் முடிவு). தொடர்ந்து, இது குறித்து கூடுதல் தகவல்களுக்காக பெல் அண்ட் ராஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேடியபோது, இதன் விலை 6,200 டாலர்கள் (வரி உள்ளிட்டவற்றை தவிர்த்து கடிகாரத்தின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூ. 5 லட்சம்) என்பது தெரியவந்தது.
ரபேல் கைக்கடிகாரத்தின் விலை
மேலும், இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதுமையான, உயர்-செயல்திறன் கொண்ட பொருட்களைக் கொண்டு ரபேல் விமானம் உருவாக்கப்பட்டது போலவே, BR 03-94 ரபேல் கடிகாரமும் செராமிக்கை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபேல் போர் விமானத்தின் பாகங்களைக் கொண்டு இக்கடிகாரம் தயாரிக்கப்பட்டதாக எந்தவொரு குறிப்பும் இல்லை.
அதேபோன்று, லிமிடெட் எடிஷனாக வெறும் 500 கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாகவும், அவை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 15 முதல் 21 வரை பிரான்ஸ் நாட்டின் லீ போர்கெட்டில்(Le Bourget) நடைபெற்ற சர்வதேச ஏர்ஷோவின் போது அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அச்செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திக் குறிப்பு
தொடர்ந்து, ரபேல் போர் விமானங்களைத் தயாரித்த டசால்ட் ஏவியேஷனின் தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராப்பியரின்(Eric Trappier) பெல் அண்டு ராஸ் நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில், "ரபேல் போர் விமானத்தை போன்றே இந்த கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடிகாரத்தின் வடிவமைப்பு ரபேல் விமானத்தைப் போன்று உள்ளது" என்றார். இதில், அக்கடிகாரம் ரபேல் விமானத்தின் பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக எங்கும் தெரிவிக்கவில்லை. இக்காணொலியை பெல் அண்டு ராஸ் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
Conclusion:
நமது தேடலின் மூலம் கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் அண்ணாமலை கட்டி இருக்கும் கைக்கடிகாரம் ரபேல் விமானத்தின் பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், அண்ணாமலை கூறியது பொய் என்பதும் தெரிய வருகிறது.