“கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் கொழுத்த குடிபோதையில், போலீஸ்காரரிடம் வம்படி வம்பு செய்யும் காட்சி. ஆட்சி அதிகாரம் கிடைத்தால், ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் அட்டூழியம் செய்வார்கள் என்பது காவிக் காலிகளின் நடைமுறை” என்ற கேப்ஷனுடன் பெண்ணொருவர் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது. அதில், இருக்கக்கூடிய பெண் கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் என்று குறிப்பிட்டு இதனை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இச்சம்பவம் 2022 ஆம் ஆண்டு நவி மும்பையில் நடைபெற்றது என்றும் அப்பெண் குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை எனவும் தெரியவந்தது.
வைரலாகும் காணொலி குறித்து உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, 2022 ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி News 18 வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “மார்ச் 25 அன்று மும்பையில் நடந்த ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டு அடையாளம் தெரியாத பெண் தனது 2 நண்பர்களுடன் டாக்ஸியில் பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றது.
News 18 வெளியிட்டுள்ள செய்தி
குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் பெண், பயணத்தின் போது டாக்ஸி ஓட்டுநரை திட்டத் தொடங்கினார், மேலும், ஓட்டுநரை ஒதுக்கித் தள்ளி காரை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முயன்றார். இதனை கவனித்து காவல்துறையினர் வந்தபோது, அப்பெண் காவல் அதிகாரியின் காலரைப் பிடித்து மிரட்டினார்.
இச்சம்பவம் நவி மும்பையின் சாலையில் நடைபெற்றது. மது போதையில் பொது சட்ட ஒழுங்கை சீர்குலைத்ததாக மூன்று பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை India TV மற்றும் Times Now Hindi உள்ளிட்ட ஊடகங்களும் விரிவாக வெளியிட்டுள்ளன. வைரலாகும் காணொலியுடன் One India English ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், எதிலுமே சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் பெயரோ விவரமும் வெளியிடப்படவில்லை.
மேலும், எதிலும் அவர் கோவா பாஜக அமைச்சரின் மகள் என்றும் குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் இச்சம்பவம் மும்பையில் நடைபெற்றது என்றும் அவர் பாஜக அமைச்சரின் மகள் இல்லை என்றும் தெரிய வருகிறது.
Conclusion:
முடிவாக நவி மும்பையில் அடையாளம் தெரியாத பெண் குடித்துவிட்டு காவல்துறையினரிடம் தகாத முறையில் ஈடுபட்ட சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணை கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் என்று தவறாக பரப்பி வருகின்றனர்.