கடந்த டிசம்பர் 13ஆம் தேதி பாராளுமன்ற வளாகத்திற்குள் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், மக்களவை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சாகர் ஷர்மா, மனோரன்ஜன் ஆகியோரும் வளாகத்தின் வெளியே கோஷமிட்ட அமோல் ஷிண்டே, நீலம் தேவி ஆகிய நால்வரை காவல்துறையினர் அன்றே கைதுசெய்தனர். தொடர்ந்து, விஷால் என்பவர் குருகிராமில் வைத்து கைது செய்யப்பட்டார். மேலும், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் லலித் மோகன் ஜா டிசம்பர் 14ஆம் தேதி காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
இந்நிலையில், “நாடாளுமன்றத்திற்குள் புகைக்குண்டு வீசிய நபர் கர்நாடக சிங்கம் அண்ணன் அண்ணாமலை அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், இப்போது புரிந்து இருக்குமே நாட்டில் நடக்கும் மத கலவரம் சாதி சண்டை குண்டு வெடிப்பு இன்னும் பல யாரால் நடத்தப்படுகிறது என்று!” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இருப்பவர் தான் நாடாளுமன்றத்திற்குள் புகைக்குண்டு வீசிய நபர் என்று கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மையைக் கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஜூன் 4ஆம் தேதி, அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து மைசூர்-குடகு நாடாளுமன்ற தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா வைரலாகும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து அண்ணாமலை ரீபோஸ்டும் செய்துள்ளார். இதன்மூலம் புகைப்படத்தில் இருப்பது பிரதாப் சிம்ஹா என்பது உறுதியாகிறது.
பிரதாப் சிம்ஹாவின் எக்ஸ் பதிவு
பாராளுமன்றத்திற்குள் நுழைந்த இருவரும் பிரதாப் சிம்ஹா வழங்கிய பாஸ் மூலம் மக்களவை நடவடிக்கைகளை பார்க்க சென்றதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்பு இருப்பதாகவோ அல்லது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவோ எந்த ஒரு செய்தியும் தகவலும் இல்லை.
Conclusion:
நம் தேடலின் முடிவில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாடாளுமன்றத்திற்குள் புகைக்குண்டு வீசிய நபருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், பிரதாப் சிம்ஹாவிற்கும் பாராளுமன்ற சம்பவத்திற்கும் தொடர்பிருப்பதால் அவருடைய புகைப்படத்தை வைத்து தவறாக பரப்பி வருகின்றனர் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.