தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராமேசுவரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிலையில், "குடியும் கும்மாளமுமாக நடக்கும் அண்ணாமலையின் பாவ யாத்திரை.. பாஜக பெண்கள் குடித்தால் பொங்க மாட்டாளா கஸ்தூரி மாமி.... #ஆழ்ந்த_இரங்கல்" என்று கூறி 1 நிமிடமும் 30 விநாடிகளும் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பெண்கள் சிலர் காரினுள் அமர்ந்துகொண்டு மது அருந்துகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Sharechatல் இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே காணொலியை கோபி என்ற பயனர் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, தேடுகையில், "குரூப் ஸ்டடி பார்த்திருக்கோம் குரூப் குடி பார்த்திருக்கீங்களா?காருக்குள் மதுவுடன் மாதர்கள்.." என்ற தலைப்பில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் என்று கூறி வைரலாகும் காணொலியை மார்ச் 11ஆம் தேதி 2021ஆம் ஆண்டு பாலிமர் நியூஸ் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
மேலும், இதே செய்தியை ஒன் இந்தியா தமிழ், சமயம் தமிழ் உள்ளிட்ட ஊடகங்களும் அதே ஆண்டு வெளியிட்டுள்ளன. பல்வேறு ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்டு இருந்தாலும் உண்மையில் இச்சம்பவம் எங்கு நடைபெற்றது என்ற தெளிவான விவரங்கள் இல்லை.
Conclusion:
நமது தேடலின் முடிவாக வைரலாகும் காணொலி பழையது என்றும் இதற்கும் பாஜகவின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.