இஸ்ரேல் - ஹமாஸ் போரின் ஒரு பகுதியாக தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், “லெபனோனில் hezbollah தீவிரவாதிகள் கார்களில் பதுக்கி வைத்திருந்த குண்டுகள் வெடித்ததால் சுமார் 100 மீட்டர் சுற்றளவில் உள்ள அணைத்து கார்களும், கட்டிடங்கள் பலத்த சேதம். சுமார் 20 பேர் மரணம், பல பேர் படுகாயம்..” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் பெய்ரூட்டின் ஹம்ரா மாவட்டத்தில் மின் ஜெனரேட்டரால் ஏற்பட்ட தீ விபத்தில் கார்கள், கட்டிடம் எரிந்தது என்று தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, MarioNawfal என்ற பத்திரிக்கையாளர் நவம்பர் 9ஆம் தேதி வைரலாகும் காணொலியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஹம்ராவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருந்த ஜெனரேட்டரில் பற்றிய நெருப்பு அதன் டீசல் டேங்கிற்கு பரவியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கிடைத்த தகவலை கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த நவம்பர் 9ஆம் தேதி National News Agency என்ற லெபனான் நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “ஹம்ரா பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மின் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும், தீ பரவியதால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சில கார்களிலும் நெருப்பு பற்றியது.
அருகில் இருந்த கட்டிடத்திற்கும் நெருப்பு பரவியது. இதற்கிடையில், தீயை அணைக்க மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களை காலி செய்யும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Arab News ஊடகமும் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தால் உயிரிழப்பும், படுகாயமும் ஏற்பட்டதாக எந்த ஒரு தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் கார்களில் பதுக்கி வைத்திருந்த குண்டுகள் வெடித்ததால் கார்களும், கட்டிடங்களும் பலத்த சேதம் அடைந்ததாக வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் உண்மையில் அது ஹம்ரா பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருந்த மின் ஜெனரேட்டரில் ஏற்பட்ட நெருப்பின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.