“கைதொலை பேசியால் ஏற்படும் விபரீதத்தை நீங்களே பாருங்கள்.... குழந்தைகள் சிறுவர்கள் செல்போனுக்கு அடிமையாகியதால் ஏற்படும் விபரீதத்தை பாருங்கள்...இதுவும் ஒருவகை போதை தான்.... மதுவை விட மிககொடூரமானது. பெற்றோர்களாகிய நாம் குடும்பத்தில் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறோம்.. கொஞ்சமாவது சிந்தித்து செயல்படுவோம்” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில்(Archive) வைரலாகி வருகிறது.
அதில், சிறுவன் ஒருவன் செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கிறான். செல்போனில் விளையாடுவதை கண்டித்து அவனது தாய் படிக்கக் கூறுகிறார். தொடர்ந்து, சிறுவனிடம் இருந்த செல்போனை தாய் பிடுங்கி செல்போனில் யாரிடமோ உரையாடிக் கொண்டிருக்கிறார். சிறிது நேரம் கழித்து அச்சிறுவன் கிரிக்கெட் பேட்டால் தாயை தாக்கி பின் செல்போனை மீண்டும் பிடுங்கி விளையாடுகிறான். இச்சம்பவம் உண்மை என்று கூறி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலி விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அக்டோபர் 2ஆம் தேதி குடும்பத்துடன் செல்போன் உபயோகிப்பதால் உண்டாகும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு காணொலி Ideas Factory என்ற பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
அக்காணொலியில் இருக்கக்கூடிய வீட்டின் உட்புறம், டி.வி, டிரெட்மில் உள்ளிட்டவைகளும் வைரலாகும் காணொலியில் உள்ளவையும் ஒத்து இருப்பதை நம்மால் காணமுடிகிறது. தொடர்ந்து வைரலாகும் காணொலியை இப்பக்கத்தில் தேடினோம். ஆனால், அது டெலிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரலாகும் காணொலியைப் போன்று பல்வேறு விழிப்புணர்வு காணொலிகளும் இப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
Conclusion:
நம் தேடலின் முடிவாக செல்போன் பயன்படுத்துவதற்காக தனது தாயை கிரிக்கெட் பேட்டால் தாக்கும் சிறுவன் என்று வைரலாகும் காணொலி உண்மையில் விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.