"எங்க போய் முடியப்போகுதோ.. நிலைமை ரொம்ப மோசமாக போகுது…" என்ற கேப்ஷனுடன் 14 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சிறுவன் ஒருவன் கையில் மது பாட்டிலுடன் மது அருந்திக்கொண்டு போதையில் தள்ளாடுகிறான்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இந்நிலையில், இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, timli_king_bhilpradesh_15 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே காணொலி பதிவாகி இருந்தது. அதில், "எச்சரிக்கை, மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, மது அருந்தவோ குடிக்கவோ கூடாது" என்றும் "இந்த வீடியோ வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இக்காணொலி எங்கு எடுக்கப்பட்டது என்பதை குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதா என்று கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்ததில், அப்படியாக எந்தவொரு செய்தியும் பதிவாகவில்லை என்று தெரியவந்தது. மாறாக, நாகை மாவட்டம் சீர்காழியில் சிறுவனுக்கு மது கொடுத்து நடனமாட வைத்த 3 பேர் சிக்கினர் என்று அக்டோபர் 31, 2016ஆம் ஆண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு வயது சிறுவனுக்கு மதுவை குடிக்க கொடுத்த இளைஞர்கள் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மேலும் ஒரு குழந்தையை மது குடிக்க வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று ஜூலை 8ஆம் தேதி 2015ஆம் ஆண்டும் செய்தி வெளியாகியுள்ளது. இச்சம்பவங்கள் நடைபெற்ற சமயத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நமக்கு கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சிறுவன் ஒருவன் மது குடித்து போதையில் தள்ளாடுவதாக வைரலாகும் காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இப்படியாக எந்த ஒரு சம்பவமும் நிகழவில்லை என்பதும் நிரூபனமாகிறது.