ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், ஈரான், யெமன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு(ஏப்ரல் மாதம்) பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மெல்ல மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில், “மனிதனின் பேராசையால் இயற்கையை அழித்தால் இயற்கை ஒரு நாள் நம்மை அழித்தே தீரும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இயற்கை ஒரு நாள் நம்மை அழித்தே தீரும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. உலக மக்களுக்கு இயற்கை தரும் ஒரு எச்சரிக்கை..... இடம் சவுதி அரேபியா” என்ற கேப்ஷனுடன் பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டு ஒட்டகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காணொலி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, deZabedrosky என்ற எக்ஸ் பக்கத்தில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “கனமழையால் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி அன்று சௌதி அரேபியாவின் தபூக் பகுதிகளில் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஒட்டகங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரலாகும் காணொலி பழையது என்பது தெரிய வருகிறது.
மேலும், கிடைத்த தகவலை கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2018ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி The National News சவுதியில் ஏற்பட்டிருந்த வெள்ள பாதிப்பு தொடர்பாக விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “மக்காவில் 10 பேரும், அல் பஹாவில் ஐந்து பேரும், ஆசீர் மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் தலா மூன்று பேரும், ஹயேல், ஜசான் மற்றும் தபூக்கில் தலா இரண்டு பேரும், ரியாத், அல் ஜூஃப் மற்றும் நஜ்ரானில் தலா ஒருவரும் வெள்ள பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சவுதி மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் ஒட்டகங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சி என்று வைரலாகும் காணொலி 2018ஆம் ஆண்டு சவுதியின் தபூக்கில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.