“மதிப்பு மிக்க குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வாலுடைய சூரத் குடோனில் கைப்பற்றிய பணம், மூன்று நாட்களாக எண்ணப்படுகிறது. இது தான் ஊழலற்ற ஆட்சியின் லட்சனம். பேசுவது நீதி நேர்மை” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி Zee5 ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “கொல்கத்தாவில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பணக் குவியலை எண்ணுவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு 16 மணிநேரம் மற்றும் 8 எண்ணும் இயந்திரங்கள் தேவைப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “தொழிலதிபர் அமீர் கானின் கார்டன் ரீச் வீட்டில் இருந்து 17 கோடி ரூபாய்க்கு மேலான பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் மீட்டனர். அவரது வீட்டில் 10 டிரங்கு பெட்டிகள் இருந்த நிலையில் 5 பெட்டிகளில் இருந்து பணம் மீட்கப்பட்டது. ஃபெடரல் வங்கி அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தயை அடுத்து, கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி எஃப்ஐஆர் பதியப்பட்டது. மேலும், பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்திற்காக அமீர் கான் E-Nuggets என்ற மொபைல் கேமிங் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தினார் என்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
வைரலாகும் காணொலியுடன் இதே செய்தியை NDTV தனது யூடியூப் சேனலில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி விரிவாக வெளியிட்டுள்ளது. மேலும், இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக கொல்கத்தா தொழிலதிபர் அமீர் கான் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து 2022ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறையின் எக்ஸ் பதிவு
Conclusion:
நம் தேடலில் முடிவாக, குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வாலுடைய சூரத் குடோனில் கைப்பற்றப்பட்ட பணம் மூன்று நாட்களாக எண்ணப்படுகிறது என்று வைரலாகும் காணொலி உண்மையில் கொல்கத்தாவில் தொழிலதிபர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் போது எடுக்கப்பட்ட காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.