ஒடிசா மாநிலம் பாலசோரில் ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற ரயில் விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விபத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர் ஷெரீபை சிபிஐ கொடூரமாக விசாரிப்பதாகவும், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலினத்தவரகள் இக்கொடூரத்தை தான் அனுபவிக்க உள்ளனர் என்று கூறி 1 நிமிடம் 19 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஆடையின்றி படுத்துக்கிடக்கும் நபரின் பின்புறத்தில் சிலர் கட்டையால் தாக்குகின்றனர். மேலும், காணொலியின் இடது புறத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவரின் புகைப்படம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
Fact-check:
முதலில் ஸ்டேஷன் மாஸ்டர் குறித்து தேடுகையில், விபத்து நடைபெற்ற பாகாநாகா பஜார் ரயில்நிலையத்தில் ஷெரீஃப் என்ற பெயரில் யாரும் பணியாற்றவில்லை என்று தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்யா குமார் சௌத்ரி நியூஸ்மீட்டர் ஆங்கிலத்திடம் தெரிவித்துள்ளார். மேலும், பாகாநாகா பஜார் ரயில்நிலையத்தின் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் எஸ்பி மொகந்தி தப்பி ஓடியதாக கூறப்பட்ட நிலையில், அதனை தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்யா குமார் சௌத்ரி மறுத்துள்ளார்.
தொடர்ந்து, அதில் உள்ள காணொலி குறித்து கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, "மெக்சிகன் கார்டல் உறுப்பினர்களிடமிருந்து திருடியதற்காக அடிக்கப்பட்டார்" என்று வைரலாகும் காணொலி பல்வேறு இணையதளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தது. poppyheroon என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரெட்டிட்டில், "கார்டல் உறுப்பினர்களிடம் இருந்து திருடியதற்காக திருடன் துடுப்பால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டார். அந்த நபரை அடிப்பவர்கள் மற்றும் கைவிலங்கு போடப்பட்டிருப்பவர் குறித்து எந்த தகவலும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும் இக்காணொலி எங்கு எடுக்கப்பட்டது என்றும் அதில் இருப்பவர்கள் யார் என்றும் நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.
Conclusion:
நமது தேடலின் முடிவாக வைரலாகும் காணொலி மற்றும் அதில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டரின் புகைப்படம் உள்ளிட்டவற்றுக்கும் பாலசோர் ரயில் விபத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. வைரலாகும் காணொலி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதிவிடப்பட்டுள்ளது என்றும் பாகாநாகா பஜார் ரயில்நிலையத்தில் ஷெரீஃப் என்ற ஸ்டேஷன் மாஸ்டரே பணியில் இல்லை என்று ரயில்வே அதிகாரி உறுதிபடுத்தி உள்ளார்.