“கிண்டி EOW இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலமைனா?? பொதுமக்களை பற்றி கொஞ்சம் யோசிச்சி பாருங்க” என்ற தகவலுடன் காவல்துறை ஆய்வாளரும் மற்றொரு காவலரும் பேசக்கூடிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது. அதில், கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் பழனி கார்த்திகேயன் தனது காவல்துறை நண்பரிடம் போக்குவரத்து காவலர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வு சமீபத்தில் திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இச்சம்பவம் 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்றது என்று தெரியவந்தது.
வைரலாகும் ஆடியோ எப்போது பகிரப்பட்டது என்பது குறித்து கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Indian Express Tamil ஊடகம் 2020ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி வைரலாகும் ஆடியோ தொடர்பான செய்தி வெளியிட்டு இருந்தது. அதில், “தமிழ்நாடு பத்திரிகை மற்றும் ஊடக நிருபர்கள் சங்கத்தின் முகநூல் பக்கத்தில் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் பழனி கார்த்திகேயன் தனது நண்பரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவரிடம், போக்குவரத்து காவலர்களின் நடத்தை குறித்து வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
India Express Tamil வெளியிட்டுள்ள செய்தி
அதில் போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் தொலைபேசியில் பேசும் ஆய்வாளர் பழனி, "நான் தம்பி வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி டூ-வீலரில் வந்து கொண்டிருந்த போது ஒரு எஸ்ஐ (அ) எஸ்எஸ்ஐ மற்றும் ஏட்டு ஒருவர் என்னை தடுத்து நிறுத்தினர். நான் ஹெல்மெட்டும் அணிந்திருந்தேன். என்னிடம் 'எங்கே போறீங்க'-னு கேட்டாங்க. நான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்னு சொன்னேன். அதுக்கு, 'நீ வீட்டுக்காவது போ; எங்கயாவது போ'-ன்னு சொல்றார்" என்கிறார்.
அதற்கு போக்குவரத்து ஆய்வாளர், 'நீ இன்ஸ்பெக்டர்-னு சொன்னியா?' என்று கேட்டதற்கு, 'நான் இறங்கி போய் இன்ஸ்பெக்டர்-னு சொன்னேன். நான் இன்ஸ்பெக்டரா இருக்கட்டும்; யாரா இருக்கட்டும். பப்ளிக் கிட்ட இப்படியா பேசுறது?' என்று பதிலளிக்க, போக்குவரத்து ஆய்வாளர் அந்த குறிப்பிட்ட காவலரிடம் போனை கொடுக்கச் சொல்லி பேசுகிறார்.
அந்த காவலரிடம் 'உங்ககிட்ட எத்தனை தடவை தான் சொல்றது, பப்ளிக் கிட்ட இப்படி பேசாதீங்கன்னு? நமக்கு கிரைம் ஆங்கிள்ல குற்றம் நடக்காம பார்த்தக்கணும். அதுதான் வேலை. அவரு ஹெல்மெட் போட்ருக்காரு, நின்னு பதில் சொல்றாரு, அவர்ட்ட இப்படி தான் பதில் சொல்றதா? யாரா இருந்தாலும், Polite-ஆ பேசுங்கன்னு தானே சொல்றோம். புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்களே நீங்க. போய் அவர்ட்ட சாரி கேளுங்க' என்று சொல்ல, சரி சார் என்கிறார் அந்த காவலர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வைரலாகும் அதே காணொலி THE ROOSTER NEWS என்ற யூடியூப் சேனலில் 2020ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அச்சமயம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் தனது நண்பரான மற்றொரு போக்குவரத்து காவலரிடம் பிற போக்குவரத்து காவலர்களின் நடத்தை பற்றி பேசியதாக வைரலாகும் ஆடியோ அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவம் என்று தெரியவந்தது.