நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்வதற்காக இந்தியா சந்திரயான் மூன்று விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி வெற்றி கண்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சந்திரயான் மூன்று எடுத்த முதல் காணொலி என்று ஒரு காணொளனலியின் தொகுப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரோவர் மற்றும் நிலப்பரப்பின் புகைப்படங்களை காணொலியாக எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இவற்றின் உண்மைத் தன்மையைக் கண்டறிய முதலில் அதில் உள்ள ரோவரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்ய அனுப்பிய Perseverance மற்றும் Curiosity ரோவரின் புகைப்படங்கள் என்பது தெரியவந்தது. இவற்றின் புகைப்படங்களை நாசா தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அதே சமயம் சந்திரயான் மூன்றில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் மற்றும் வைரலாகும் ரோவரின் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்க்கையில் அவை இரண்டும் வெவ்வேறாக இருப்பதை நம்மால் காண முடிகிறது.
மேலும், அவற்றில் இருக்கும் நிலப்பரப்பின் புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். அப்போது, நாசாவின் Mars Exploration Rover எடுத்த செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்கள் என்பது தெரியவந்தது. நிலப்பரப்பின் புகைப்படங்களை ஒன்றாக எடிட் செய்து காணொலி போன்று பரப்பி வருகின்றனர்.
இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தேடுகையில் வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய எதுவும் அதில் இல்லை என்று உறுதிகயாகிறது. மேலும், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி லேண்டர் எடுத்த பிரக்யான் ரோவரின் காணொலியே கடைசியாக இஸ்ரோவின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் எக்ஸ் பதிவு
Conclusion:
நமது தேடலில் முடிவாக சந்திரயான் மூன்று எடுத்த முதல் காணொலி என்று வைரலாகும் காணொலி உண்மை இல்லை என்றும் அவை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாசாவின் ரோவர்கள் எடுத்த புகைப்படங்கள் என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.