ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30 அன்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரியிலும் வட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையின் சாலை வெள்ளத்தில் தத்தளிப்பது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் இக்காணொலி சவுதி அரேபியாவின் ஜித்தாவில் எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, khaberni (Archive) என்று ஜோர்தானிய ஊடகம், “சற்று நேரத்திற்கு முன்பாக ஜித்தாவில் எடுக்கப்பட்ட காணொலி” என்று தற்போது வைரலாகும் அதே காணொலியை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும், “கனமழையால் சவுதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள சாலைகளில் வெள்ளம்” என்று குறிப்பிட்டு வைரலாகும் அதே காணொலியை மற்றொரு குவைத் ஊடகமான Ashab Al-Himam News (Archive) கடந்து செப்டம்பர் 3ஆம் தேதி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இது குறித்த விரிவான செய்தியை “தற்போது ஜித்தாவில், சவுதி அரேபியா தண்ணீரில் மூழ்கியது! தெருக்கள் ஆறுகளாக மாறியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்” என்ற தலைப்பில் HAG Weather என்ற யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.
Conclusion:
முடிவாக நம் தேடலில் சென்னை மெரினா கடற்கரை மழை வெள்ளத்தில் தத்தளிப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையில் சவுதி அரேபியாவின் ஜித்தாவில் எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.