Fact Check: பாஜக அமைச்சர்களுடன் தனி விமானத்தில் வந்தாரா தலைமை தேர்தல் ஆணையர்? உண்மை அறிக
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பாஜக அமைச்சர்களுடன் தனி விமானத்தில் வந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
By Ahamed Ali
Claim:இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பாஜக அமைச்சர்கள் ஒரே விமானத்தில் இருந்ததாகக் கூறும் காட்சி இணையத்தில் வைரலாகிறது
Fact:இத்தகவல் தவறானது. உண்மையில் காணொலியில் இருப்பது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
2024ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். தொடர்ந்து, அவர் குற்றச்சாட்டிற்காக பயன்படுத்திய ஆவணங்களை விசாரணைக்கு வழங்க கோரி தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், “பாஜக அமைச்சர்களுடன் தனி விமானத்தில் ஒன்றாக வந்த இந்திய தேர்தல் ஆணையர்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில் தனி விமானத்திலிருந்து அமைச்சர்களுடன் இறங்கும் நபர் தலைமை தேர்தல் ஆணையர் என்று கூறி பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் பதிவு
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் காணொலியில் இருப்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவர் என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை ஆராய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி All India Radio News என்ற இந்திய அரசின் ஊடகம் தனது எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலியை பதிவிட்டிருந்தது. அதில், இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், அருணாச்சலப் பிரதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக இட்டாநகர் வந்தடைந்தார். ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜு மற்றும் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அசுதோஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Chief Justice of India B.R. Gavai arrived in Itanagar on a two-day visit to #ArunachalPradesh, accompanied by Union Ministers Arjun Ram Meghwal, Kiren Rijiju, and Chief Justice of the Gauhati High Court, Justice Ashutosh Kumar.
— All India Radio News (@airnewsalerts) August 9, 2025
Tomorrow, CJI Gavai will inaugurate the newly… pic.twitter.com/cE7RaFoSdX
நஹர்லகுன் பகுதியில் உள்ள டி செக்டரில் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் இட்டாநகர் நிரந்தர பெஞ்சின் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை நாளை (ஆகஸ்ட் 10ஆம்) தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் திறந்து வைப்பதற்காக வந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே காணொலியை ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இருவரது புகைப்படங்களின் ஒப்பீடு
தொடர்ந்து இச்செய்தி குறித்து கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது, ஆகஸ்ட் 10ஆம் தேதி ANI ஊடகம் இது தொடர்பான விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா காண்டு, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அசுதோஷ் குமார், உச்ச நீதிமன்றம், கவுகாத்தி உயர் நீதிமன்றம் மற்றும் இட்டாநகர் நிரந்தர அமர்வு நீதிபதிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த பல புகழ்பெற்ற நீதிபதிகள் முன்னிலையில் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பங்கேற்றதாக எந்த ஒரு செய்தியும் இல்லை.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பாஜக அமைச்சர்களுடன் தனி விமானத்தில் ஒன்றாக வந்ததாக வைரலாகும் காணொலியில் இருப்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் என்று தெரியவந்தது.