2025-26ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்குதல் செய்தார். இந்நிலையில், “பட்ஜெட் தயாரிப்புக்கும் இந்திய தேர்தல் கமிஷனருக்கும் என்ன சம்பந்தம்? இவனுக்கு அங்க என்ன வேலை.???” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள ராஜிவ் குமார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமருடன் பட்ஜெட் தாக்கல் செய்ய வரும்போது எடுக்கப்பட்ட காட்சி இடம்பெற்றுள்ளது. இது 2025ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது எடுக்கப்பட்டது போன்றும் பட்ஜெட் தாக்கல் செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஏன் வருகிறார் என்ற கேள்வியுடனும் இப்புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இப்புகைப்படம் 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது எடுக்கப்பட்டது என்றும் அச்சமயம் ராஜிவ் குமார் நிதித்துறை செயலாளராக இருந்ததும் தெரிய வந்தது.
வைரலாகும் புகைப்படத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து அதன் உண்மை தன்மையை கண்டறிய ஆய்வு செய்தோம். அப்போது, Business Standard ஊடகம் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி வைரலாகும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், 2020-21ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே புகைப்படம் PIB இணையதளத்திலும் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.
Business Standard வெளியிட்டுள்ள செய்தி
தொடர்ந்து, தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜிவ் குமார் குறித்து தேடுகையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவர் குறித்து தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வந்த இவர், மே 15, 2022 அன்று 25வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு ஜூலை 2019 முதல் பிப்ரவரி 2020 வரை இந்தியாவின் நிதித்துறை செயலாளராக பதவி வகித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 2020 பிப்ரவரியில் இவர் இந்திய நிதித்துறை செயலாளராக இருந்தார் என்பது தெரியவந்தது.
Conclusion:
முடிவாக நம் தேடலில் 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் சென்றபோது அவருடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இருந்ததாக வைரலாகும் புகைப்படம் 2020-21ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. மேலும், அச்சமயம் ராஜிவ் குமார் இந்திய நிதித்துறை செயலாளராக இருந்தார் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.