புத்தாண்டு மற்றும் பொங்கல் தினத்தையொட்டி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு வகையான சலுகைகளுடன் பொருட்கள் விற்பனை செய்வது வழக்கம். சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புத்தாண்டு சலுகையுடன் ரீசார்ஜ் வழங்குகிறது. இந்நிலையில், “NEW YEAR RECHARGE OFFER புத்தாண்டையொட்டி, M K Stalin அனைவருக்கும் 3 மாத ரீசார்ஜ் ₹749 முற்றிலும் இலவசம். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இப்போதே ரீசார்ஜ் செய்யவும். இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே” என்ற தகவலுடன் newyear25.b-cdn.net என்ற இணைய லிங்க் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
இணைய லிங்கில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இச்சலுகை தமிழ்நாடு முதல்வர் வழங்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
Fact-check:
நியூஸ்மீட்டர் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் வைரலாகும் இணைய லிங்க் ஸ்பேம் என்றும் தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய இதுதொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த ஜனவரி 10ஆம் தேதி இதுதொடர்பாக தினகரன் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “தமிழ்நாடு சைபர்க்ரைம் பிரிவு, பண்டிகைக்காலங்களைக் குறி வைத்து நடக்கும் மோசடி குறித்து பொது எச்சரிக்கையை விடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் அதில், வைரலாகும் இணைய லிங்க் குறித்தும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, “https://newyear25.b-cdn.net/ போன்ற சந்தேகத்திற்கிடமான இணைப்பை கிளிக் செய்யும்படி இம்மோசடி மக்களை வழிநடத்துகிறது. இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் முக்கியமான தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்கள் திருடப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை The Hindu ஊடகமும் வெளியிட்டுள்ளது. இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல்துறையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுதொடர்பாக பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளது.
முடிவாக, நம் தேடலில் புத்தாண்டையொட்டி ரூபாய் 749 மதிப்புள்ள 3 மாத ரீசார்ஜை இலவசமாக வழங்கவுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று வைரலாகும் இணைய லிங்க ஸ்பேம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.