"RSS பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படும் கொடூர காட்சி…" என்ற கேப்ஷனுடன் சமூக வலைத்தளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், நபர் ஒருவர் சிறுவனை கொடூரமாக தாக்குவது பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய அக்காணொலியின் குறிப்பிட்ட பகுதியை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது amritvichar என்ற இந்தி ஊடகம் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, "உத்தரப்பிரதேச மாநிலத்தின் சீதாபூர் பகுதியில் உள்ள கிஷோரி பலிகா வித்யாலயா உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவரை அடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆச்சார்யாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பள்ளி மேலாளர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட ஆச்சார்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், Dainik Bhaskar வெளியிட்டுள்ள விரிவான செய்தியின்படி, காணொலியில் பதிவாகியுள்ள சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது என்றும் அதில் இருப்பவரின் பெயர் சதீஷ் ஜோஷி என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் இருந்து தப்பித்து ஓடியதற்காக அந்த மாணவனை இவ்வாறு தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று Jagran வெளியிட்டுள்ள செய்தியில், "மாணவனின் வீட்டிற்கு மன்னிப்பு கேட்க சென்ற ஆசிரியரை கிராமத்தினர் சேர்ந்து தாக்கியுள்ளனர். அதேசமயம், "இது போன்ற சம்பவங்கள் ஏதும் தங்களுக்கு நடைபெற்றால் காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறு" சீதாபூர் காவல் கண்காணிப்பாளர் சக்ரேஷ் மிஷ்ரா பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்து அறிவுரை வழங்கினார்.
பள்ளி மாணவர்களை சந்தித்த சீதாபூர் காவல் கண்காணிப்பாளர்
Conclusion:
நம் தேடலின் முடிவாக ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுவதாக வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அது, உண்மையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள உறைவிட பள்ளியில் ஆசிரியரால் மாணவன் தாக்கப்படும் காட்சி என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.