கடந்த ஜூன் 6ஆம் தேதி இமாச்சலப்பிரதேசம் மண்டி நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்.பியான கங்கனா ரனாவத்தை, சண்டிகர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்ததாக குற்றஞ்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கங்கனா ரனாவத் காணொலி ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து அதிகாரி குல்விந்தர் கவுர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், “இவள்தான் குல்விந்தர் கவுர்!!! இவள்தான் கங்கனா ராவத்தை கண்ணத்தில் அறைந்தவள்.. இப்போது தெரிகிறதா யார் மூலகாரணம் என்று!!!” பெண் ஒருவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் குல்விந்தர் கவுர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “PM OF INDIA” என்ற கேப்ஷனுடன் திவ்யா மதர்னா என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் புகைப்படம் கடந்த ஜூன் 5ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் ஓசியன் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ என்பது நமது தேடலில் தெரியவந்தது.
தொடர்ந்து, இது தொடர்பாக தேடுகையில் திவ்யா மதர்னா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (Archive) பக்கத்தில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இதே புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், ராஜஸ்தானிற்கு வருகை தந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை தான் வரவேற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரி குல்விந்தர் கவுர் காங்கிரஸ் தலைவர்களுடன் இருப்பதாக வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது ராஜஸ்தான் மாநிலம் ஓசியன் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ திவ்யா மதர்னா என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், அவரை குல்விந்தர் கவுர் என்று கூறி தவறாக பரப்பி வருகின்றனர்.