உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வேண்டுகோள் என்று தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “இந்திய அரசியலமைப்பை, இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கிறோம், ஆனால் இதற்கு உங்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்க வேண்டும், இந்த சர்வாதிகார அரசாங்கம். மக்களை பயமுறுத்துவார்கள், மிரட்டுவார்கள் ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம், தைரியமாக இருங்கள், அரசாங்கத்திடம் கணக்கு கேளுங்கள், நான் உங்களுடன் இருக்கிறேன்.
ஒரு தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிரதம மந்திரி எதிர்க்கட்சித் தலைவர் மூன்று பேரும் சேர்ந்து தான் ஒரு தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமிக்க முடியும் ஆனால் தற்போது சூழ்நிலை மாறிவிட்டது தனக்கேற்றது போல் சட்டத்தை இயற்றி தனக்கு வேண்டியவர்களை கமிஷனர் ஆக்கி தான் மற்றும் வெற்றி பெற வழிவகை செய்து சட்டத்தை இயற்றுகிறார்கள் ஜனநாயகம் எவ்வளவு கேலிக்கூத்தாக சென்று விட்டது என்று மக்களை புரிந்து கொள்வீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
Fact-check:
இவ்வாறாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினாரா என்று கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்தியா டுடே செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "இது ஒரு தவறான தகவல். எந்த தலைமை நீதிபதியும் இதுபோன்ற செயலை செய்யமாட்டார், நீதிபதி சந்திரசூட் போன்ற ஒரு நபர் இது போன்று கண்டிப்பாக செய்யமாட்டார்.
மாண்புமிகு நீதிபதியின் பெயரால் இதுபோன்ற தவறான குறும்புச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா லா டுடேவிடம் தெரிவித்ததாக” குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “லா டுடே தொடர்பு கொண்டதில், இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலான துஷார் மேத்தா, பரப்பப்பட்ட செய்தி போலியானது என்பதை உறுதிப்படுத்தினார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில், அதே ஆகஸ்ட் 14ஆம் தேதி Outlook India செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தீங்கிழைக்கக்கூடிய தகவலை மேற்கோள்காட்டிய உச்ச நீதிமன்றம். அது ‘போலியனது’ மற்றும் ‘தவறான நோக்கத்துடன்’ பகிரப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக தூர்தர்ஷன் ஊடகம் உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியை தனது எக்ஸ் தளத்தில் அதே ஆகஸ்ட் 14ஆம் தேதி பதிவிட்டுள்ளது.மேலும் இதே தகவல் ஆங்கிலத்தில் பகிரப்பட்ட போது நியூஸ்மீட்டர் ஆங்கிலம் இதனை ஃபேக்ட்செக் செய்து தவறு என்று நிரூபித்துள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் அதனை உச்ச நீதிமன்றமும், இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலும் முற்றிலுமாக மறுத்துள்ளனர் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.