அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப் பயனாளிகளுக்குக் கடனுதவிகள் வழங்கும் விழா நேற்று (டிசம்பர் 06) சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, பேசிய அவர், “தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமதிப்பிற்குரிய அருமை சகோதரர் செல்வப் பெருந்தகை அவர்களே, அரியலூர் மாவட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. முருகானந்தம் ஐஏஎஸ் அவர்களே…” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெயருக்கு பதிலாக முருகானந்தம் ஐஏஎஸ் என்று முதல்வர் கூறியதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
“விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் IAS ஆ @mkstalin ??? கூட்டணி கட்சி தலைவர் பெயர் கூட தெரியல உங்களுக்கு மக்கள் கஷ்டம் எங்க தெரிய போகுது” என்ற கேப்ஷனுடன் இக்காணொலியை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காணொலி தவறாக உள்ளது என்றும் உண்மையில் மு.க. ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் பெயரை சரியாக திருமாவளவன் என்று குறிப்பிடுகிறார் என்றும் தெரியவந்தது.
இக்காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய வைரலாகும் காணொலியில் இருக்கும், “Live: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப் …” என்ற கீவர்டைக்கொண்டு யூடியூபில் சர்ச் செய்து பார்த்தபோது, அதன் முழுநீள காணொலி M.K. STALIN என்ற யூடியூப் சேனலில் நேற்று (டிசம்பர் 6) பதிவிடப்பட்டிருந்தது. அதனை ஆய்வு செய்தபோது 0:48 பகுதியில் பேசும் முதல்வர் ஸ்டாலின், “அரியலூர் மாவட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. முருகானந்தம் ஐஏஎஸ் அவர்களே…” என்றே குறிப்பிடுகிறார்.
ஆனால், இதே காணொலியை Sun News ஊடகமும் நேற்று வெளியிட்டுள்ளது. அதில், 16:00 பகுதியில் பேசும் முதல்வர் ஸ்டாலின், “அரியலூர் மாவட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் என்னுடைய அருமை சகோதரர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்களே…” என்று குறிப்பிடுகிறார். இதே போன்று கூறுவதை 13:30 பகுதியில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டுள்ள காணொலியிலும் காணலாம்.
Conclusion:
நம் தேடலின் முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் ஐஏஎஸ் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியதாக வைரலாகும் காணொலியில் இருப்பது தொழில்நுட்பக் கோளாறு என்றும் உண்மையில் அவர் சரியாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்று கூறுகிறார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.