“துர்கா ஸ்டாலின் என்ன MLAவா? இல்ல கவுன்சிலரா? அரசு திட்டத்தை தொடங்கி வைக்க இவங்க யாரு??? அரசு விழாக்களில் ஒரு குடும்பமே தமிழ்நாட்டு தொந்தரவு பண்றாங்க அய்யா M. K. Stalin தமிழ்நாடு மன்னராட்சி கிடையாது..! மன்னார் ஆட்சி நடக்கும் நாட்டில் கூட இப்படி எல்லாம் நடக்காது..!” என்ற கேப்டஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மக்களுக்கு உணவு வழங்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்நிகழ்வு, அரசு விழா என்றும் அதில் எவ்வாறு எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் பதவியில் கூட இல்லாத முதல்வரின் மனைவி பங்கேற்கலாம் என்றும் கேள்வி எழுப்பி இக்காணொலியை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இந்நிகழ்வு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்றது என்றும் தெரியவந்தது.
இது குறித்த உண்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “கொளத்தூரில் ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டம்... முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி திறந்து வைத்தார் துர்கா ஸ்டாலின்” என்று வைரலாகும் அதே காணொலியை பாலிமர் ஊடகம் நேற்று (பிப்ரவரி 20) வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, ABP Nadu ஊடகம் நேற்று (பிப்ரவரி 20) இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “சென்னை கொளத்தூர் ஜெகநாதன் தெரு முதல்வர் படைப்பகம் அருகில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள் என்ற திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு உணவளித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மக்கள் முதல்வரின் மனிதநேய விழாவின் முதல் நிகழ்ச்சியாக பிப்ரவரி 20ஆம் தேதியான இன்று தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி வரை 365 நாட்களும் நாள் ஒன்றுக்கு 1000 முதல் 1200 பேருக்கு துறைமுகம், திரு.வி.க நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் தொகுதிகள் என கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் அமுதக் கரங்கள் திட்டம் மூலம் தினம் தோறும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை மாலைமலர், தினமணி உள்பட பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
இச்செய்திகளைக் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி கட்சி நிகழ்ச்சி என்றும் அரசியல் நிகழ்ச்சி இல்லை என்றும் தெரிய வருகிறது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியை துவக்கி வைத்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் துர்கா ஸ்டாலின் முதல்வரின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டத்தின் முதல் நிகழ்ச்சியான அமுத கரங்கள் திட்டத்தை துவக்கி வைத்தார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், இது கட்சி நிகழ்ச்சி எனவும் தெளிவாகிறது.